தீக்கதிர்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் காங்கிரஸ் போராட்டம் : மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவீர்…! மன்மோகன் சிங் பேச்சு..!

புதுதில்லி:
எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓரணியில் திரண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு
அனுப்ப தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறை
கூவல் விடுத்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய வற்றால் பெட்ரோல், டீசல் விலை வர லாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே  வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, திங்களன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் போராட்டம் நடந்தது.

ராம் லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்ட ணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, ‘‘மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதி யையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை.

மாறாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் குரலை உணர்ந்து நாட்டின் இறை யாண்மை மற்றும் ஜனநாயகத்தை காக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்வர வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும்’’ எனக் கூறினார்.

முன்னதாக, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினார் ராகுல். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராஜ்காட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.