திருப்பூர்,
வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மோடி அரசு, மாநில எடப்பாடி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மத்திய மோடி அரசு காரணங்களைச் சொல்லி தட்டிக்கழித்து வருகிறது. இதைக் கண்டித்து பொது மக்களின் கோபாவேசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் எதிர்க்கட்சிகள் திங்களன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் திருப்பூர் தெற்கு, வடக்கு உழவர் சந்தைகளில் விவசாயிகள் காலை 6 மணியுடன் வியாபாரத்தை முடித்துக் கொண்டனர். திருப்பூரில் இயங்கும் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்த ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாத நிலையில், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. அதேபோல் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பாத்திர தொழிலிலும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனால் 7 டன் மதிப்பிலான எவர்சில்வர், செம்பு, பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் செயல்படும் விசைத்தறி தொழிலும் முடங்கியது.

நகரின் மையப் பகுதியில் உள்ள புது மார்க்கெட் வீதி, அரிசிக் கடை வீதி, பூ மார்க்கெட், ஈஸ்வரன் கோயில் வீதி உள்பட வர்த்தக, வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் நகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் மருந்துக் கடைகளுடன், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கடைகள் தவிர மிகப்பெரும்பான்மையான கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பேருந்துகள், சில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதில் பயணிகள் மிகவும் குறைவாகவே இருந்தனர். பயணிகள் ஆட்டோ, சரக்கு வேன், சரக்கு ஆட்டோ, லாரிகள் உள்பட சரக்குப் போக்குவரத்து சார்ந்த வாகனங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. அதே சமயம் மாவட்டத்தில் பல பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், பள்ளிக்கூடங்கள் இயங்கின. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் ஆர்.வடிவேல்தலைமை தாங்கினார், இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், தாலுகா குழு உறுப்பினர்கள் செல்லதுரை, ராஜரத்தினம், முத்துசாமி, விவசாய சங்கத் தலைவர் கார்த்திகேயன், விவசாய தொழிலாளா சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கைதாகினர். மேலும், உடுமலை பகுதியில் கடையடைப்பு போராட்டத்திற்கு உடுமலை வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து இருந்தால் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பல்லடத்தில் என்.ஜி.ஆர். சாலையில் வாகனத்தை கயிறு கட்டி இழுத்து வந்து அண்ணாசிலை அருகில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தாராபுரம் அண்ணாசிலை முன்பு அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களில் திரளானோர் கலந்து கொண்டு மத்தியஅரசின் மக்களை நசுக்கும் கொள்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில் மற்றும் உடுமலை உள்பட அனைத்து நகர, ஒன்றியப் பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் முழுமையாக வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், உற்பத்தி சார்ந்த தொழில்களும் கணிசமாக நடைபெறவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.