பேட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் மீது மத்திய அரசு வரிமேல் வரி விதித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு, விலைஉயர்வை பயன்படுத்தி மக்களிடம் இருக்கும் பணத்தை வரியின் பேரில் கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தன. அதன் படி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் இடதுசாரி கட்சியினர் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருப்பதுடன், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை, திருவையாறு, கன்னியாகுமாரி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றனர். ஆட்டோ மற்றும் லாரிகள் முழுமையாக வேலை நிறுத்தால் இயங்கவில்லை. இதே போல் குஜராத், கர்நாடகம், பாண்டிச்சேரி, கேரளா, ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மறியல் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சிகளின் சார்பாக மறியல் போராட்டம் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, அண்ணாசாலை , தாராபூர் டவர் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், சிபிஐ(எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.