இன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு,

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடைபிடித்து வந்த மக்கள் விரோத நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு வருகின்றன.

மத்திய பாஜக அரசின் இத்தகைய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினை  குறைத்திட வேண்டுமென வலியுறுத்தியும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்), எஸ்யுசி(ஐ) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில்  இன்று (10-9-2018) பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.

இன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகளின் சார்பில்  மறியல் போராட்டமும்  நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஆர்.முத்தரசன், சிபிஐ(எம்.எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

பொது வேலை நிறுத்தத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறைவான அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டன. வணிகர்கள்,  ஆட்டோ தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்சார ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று அதை வெற்றிபெறச் செய்த அனைத்து தரப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.