தீக்கதிர்

நிர்க்கதியாக விடப்பட்ட முசாபர் நகர் முஸ்லிம்கள் : ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குற்றச்சாட்டு…!

லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், இஸ்லாமியர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் பாஜக-வினரும் நடத்திய இந்த வன்முறையில் இஸ்லாமியர்கள் 60 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக கூறி, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த வன்முறையில், அப்பாவி இஸ்லாமியர்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர், உயிர் பிழைப்பதற்காக இடம்பெயர்ந்தனர்.

இந்த வழக்கில் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே குற்றம்சாட்டப்பட்டது. முசாபர் நகர் பகுதியில் கலவரத்தைத் தூண்டும் விதமாக பாஜக-வினர் பேசியதாக, அப்போதிருந்த அகிலேஷ் அரசு வழக்குப்பதிவு செய்தது. சிறப்பு விசாரணைக் குழுவையும் (எஸ்.ஐ.டி.) அமைத்தது.

ஆனால், பின்னர் நடைப்பெற்ற தேர்தலில், இவ்வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் சுரேஷ் ராணா, சங்கீத் சோம், உமேஷ் மாலிக் உள்ளிட்டோர் போட்டியிட்டு, எல்எல்ஏ-க்களாகவும் அமைச்சர்களாகவும் ஆகி விட்டதால், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை.இதுதொடர்பாக, சர்வதேச மனித உரிமை அமைப்பான, ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “முசாபர் நகர் வன்முறையில் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் அளிப்பதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்திருந்தது. ஆனால் அது ஏதோ சில காரணங்களால் மறுக்கப்பட்டுள்ளது. வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் காலனிகளில் குடியமர்த்தப்பட்டனர்; இந்த காலனிகளில் சாக்கடை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட, உத்தரப்பிரதேச அரசு செய்து தர மறுப்பது அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்; இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பத் திரும்ப வறுமையில் சுழன்று வாழும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.