கோவை,
ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், தொழிலாளர்களிடையே ஆளுங்கட்சி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் சிலர் ஒற்றுமையைக் குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்துவதாக திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாறன், தலைவர் செல்வம், கோவை மேக்சி கேப் வேன் சங்க தலைவர் சு.பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை சித்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி பகுதியில் 120-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், வேன்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏவின் தூண்டுதலின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஓட்டுநர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதுடன், மோதல் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஸ்டாண்டுகளில் புதிதாக வாகனங்களை சேர்க்க வேண்டுமென வற்புறுத்துவதுடன், அவர்கள் கூறும் நபர்களை சேர்க்காவிட்டால், தொழில்செய்ய முடியாது என்றும் மிரட்டுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வுகாண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.