சென்னை,
ஓராண்டில் உலகமுழுவதும் ஏறக்குறைய 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர். அதில் 1 லட்சம் பேர் இந்தியர்கள். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் நாள் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளில் தற்கொலைகள் நடப்பதற்கானக் காரணங்களையும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் பற்றி பல்வேறு மக்கள் நல ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தோழன் அமைப்பு சென்னை சேப்பாக்கத்திலிருக்கும் சென்னை நிருபர்கள் சங்கத்தில் தற்கொலையற்ற தமிழகத்தை உருவாக்க உறுதியேற்பு நிகழ்வு ஒன்றை செப்டம்பர் 9 அன்று ஒருங்கிணைத்திருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவணப்பட இயக்குனரும் பாலினசிறுபான்மையினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவருமான மாலினி ஜீவரத்தினம், மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, தன்னம்பிக்கை பேச்சாளர் ஆல்ஃப்ரெட் ஜோஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்மறை எண்ணங்கள் வரும்போதெல்லாம் அதிலிருந்து திசை மாறி வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது பெரும்பாலான தற்கொலைகளைக் குறைக்கும் என்றார் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி. சாதிய, பாலின வேறுபாடுகள் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆணவத்தால் நிகழ்ந்தேறிய தற்கொலைகள் எவ்வாறு வயிற்றுவலியால் தற்கொலை என்று ஆவணப்படுத்தப்படுகிறது? இங்கு உரிமை என்பது ஏட்டில் மட்டுமே இருக்கிறதா? என்ற கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிய மாலினி ஜீவரத்தினம், தற்கொலை எண்ணம் உடையவர்களிடம் உரையாடுங்கள், அவர்களின் வலிகளை உணர முயற்சியுங்கள், அலட்சியப்படுத்தாமல் கேளுங்கள், உரிமைகளைப் பறிக்காதீர்கள் என்றுபேசினார். தொடர்ந்து பேசிய தன்னம்பிக்கை பேச்சாளர் ஜோஸ் வேறு எந்த உயிர்களும் தற்கொலை செய்துகொள்வதில்லை மனிதரைத் தவிர. பல்வேறு தேவைகளை, தேவையற்றவைகளை மனிதனே வடிவமைத்துக்கொண்டான். அதை நோக்கிய பயணமும் அதனால் ஏற்படும் தடைகளும் தான் தற்கொலை எண்ணம் உருவாக காரணமாக இருக்கின்றது என்று விளக்கினார். நிகழ்வின் இறுதியாக, வந்திருந்தோர் அனைவரும் தற்கொலை எண்ணங்களைத் தடுப்பதற்கான உறுதிமொழியை ஏற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.