தீக்கதிர்

தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கை முதலமைச்சர் வெளியிட்டார்…!

சென்னை:
தமிழக அரசின் புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பொறியியல் பட்டதாரிகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தொடர்பாக, தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னணி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிறுவனங்கள் எளிதாக தொடங்க ஒற்றை சாளர முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் எளிமையாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையில் அம்சங்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை கடந்த 2008ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.