தீக்கதிர்

டெபாசிட்டுக்களைத் திரும்பப் பெறும் வெளிநாடு வாழ் குஜராத்திகள்…!

காந்தி நகர்;
வெளிநாடு வாழ் குஜராத்திகள், குஜராத்தின் கட்ச் வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை, திடீரென திரும்பப் பெற துவங்கியுள்ளனர். கடந்த 2017 டிசம்பர் முதல் தற்போதுவரை ஆயிரம் கோடி ரூபாயை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த குஜராத்திகள், கென்யா நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். எனினும் இவர்கள் கட்ச் மாவட்ட வங்கிகளில் அதிகளவு பணத்தை டெபாசிட் செய்திருந்தனர்.

இந்நிலையில், கென்யாவுக்கு வெளியே ஈட்டப்பட்ட வருவாய்க்க்கு அபராதம் மற்றும் வரி விதிக்கும் நடைமுறையை அண்மையில் கென்யா அறிமுகம் செய்தது. இது கட்ச் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள கென்யாவாழ் குஜராத்திகளுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து அவர்கள், கட்ச் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தைத் தற்போது திரும்பப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கடந்த 2017 டிசம்பர் முதல் ஆயிரம் கோடி ரூபாயையும், குறிப்பாக, 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 430 கோடி ரூபாயையும் திரும்பப் பெற்றுள்ளனர்.
இதன்மூலம், கட்ச் வங்கிகளில் வெளிநாடுவாழ் குஜராத்திகள் செய்திருந்த டெபாசிட் ரூ. 12 ஆயிரத்து 302 கோடியிலிருந்து ரூ. 11 ஆயிரத்து 872 கோடியாக குறைந்துள்ளது.