சேலம்,
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் இடதுசாரி கட்சியினர் ஆவேசமிகு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக மோடி அரசு கடைப்பிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவிலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அதனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்), எஸ்யுசிஐசிசி கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் கண்டன உரையாற்றினார். இதில் சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், எஸ்யுசிஐசிசி நடராஜன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, டி,உதயகுமார், எம்.சேதுமாதவன், எம்.குணசேகரன், எ.முருகேசன், வி.கே.வெங்கடாச்சலம், சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிக்குமார், மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின்நாசகார கொள்கைகளை கண்டித்து ஆவேசமிகு முழக்கங்களை எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் மாநகர மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ், மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் சிபிஐ மாவட்ட செயலாளர் எ.மோகன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல், மேட்டூரில் வொர்க்ஷாப் கார்னரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிபிஎம் மேட்டூர் செயலாளர் எஸ்.வசந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், சேலம் மாவட்டம் முழுவதும் கடைகள்அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் இ.கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.கே. சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்கமணி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, பிரதேசக் குழு செயலாளர் ஜி.செல்வராஜ், சண்முகம் உட்பட கலந்து கொண்டனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, எருமாடு, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 7 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. உதகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், கோத்தகிரியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ஆல்தொரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.