கோவை,
கோவையின் அடையாளமாய் திகழும் சிறுவாணியை அபகரிக்க முயற்சிக்கும் சூயஸ் நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி கோவையில் சிபிஎம் சார்பில் பிரச்சார இயக்கம் ஞாயிறன்று நடைபெற்றது.

கோவை மாநகர மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீரை விநியோகிக்கும் பொறுப்பை கோவை மாநகராட்சி சூயஸ் என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு கோவை மாநகர மக்களின் தாகத்தை கார்ப்ரேட் நிறுவனத்திடம் தாரைவார்த்துள்ள கோவை மாநகராட்சியை கண்டித்தும், சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை மற்றும் பீளமேடு நகரக்குழுவின் சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கம் எஸ்ஐஎச்எஸ் காலனியில் துவங்கி ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், பீளமேடு, ஆவராம்பாளையம், பழையூர், உடையாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு இரவு சௌரியபாளையம் பகுதியில் நிறைவுற்றது. இந்த பிரச்சார இயக்கத்தில் சூயஸ் நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி போடப்பட்டிருக்கும் ரகசிய ஒப்பந்தம் குறித்தும், இதனால் ஏற்படும் அபாயம் குறித்தும் மக்களிடையே தலைவர்கள் உரையாற்றினர்.

முன்னதாக இப்பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அஐய்குமார் மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் மற்றும் சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், சூலூர் தாலுகா செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.