ஈரோடு,
நம்பியூர் தாலுகா காராப்பாடி எல்லைக்காடு பகுதியில் சீரான குடிநீர் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதில் ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா காராப்பாடி எல்லைக்காடு அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் நாங்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாரம்பாளையம் பகுதியில் குடிநீர் எடுத்து வருகிறோம். இதனால்முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே எங்கள் ஊருக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

உள் விளையாட்டு அரங்கம்:
ஈரோடு மாவட்ட கராத்தே அசோசியேசன் சார்பில் யுவராஜா, சக்திவேல் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் உள் விளையாட்டு அரங்கம் இல்லை. இதனால் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியவில்லை. எனவே அனைத்து விளையாட்டு போட்டிகளின் வீரர், வீராங்கனைகளையும் பயிற்சி பெறும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

சுடுகாடு ஆக்கிரமிப்பு:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கவுண்டம்பாளையம் ஊரின் கிழக்கு பகுதியில் பொது சுடுகாடு இருந்தது. மேலும் அந்த இடத்தை நாங்கள் வழித்தடமாகவும் பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் சுடுகாடு பகுதியை சிலர் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி விட்டனர். எனவே சுடுகாடு ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டுத்தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

நடத்துனர் மீது நடவடிக்கை
உரிமையிழப்போர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அளித்த மனுவில், சென்னிமலையில் இருந்து எழுமாத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்த அய்யப்பன் என்பவர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை பொதுமக்கள் பிடித்து சென்னிமலை காவல்துறையினரிடம் ஒப்படைந்தனர். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துபணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.