மும்பை;
பொருளாதார வளர்ச்சியில் விரைவிலேயே இந்தியா, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி விடுவோம் என்று முந்தைய வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலிருந்தே பாஜக-வினர் கூறிவருகின்றனர். ஆனால், மோடியின் ஆட்சி வரையிலும் அது நடக்கவில்லை.இந்நிலையில் புதிய உபாயம் ஒன்றைக் கண்டறிந்த மோடி அரசு, தற்போது சீனாவை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளது.காங்கிரஸ் தலைவர் என்றாலும், இந்துத்துவ சிந்தனை கொண்டவர் என்று கூறி, மத்திய உள்துறை முன்னாள் அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத்தில் பாஜக சிலை அமைத்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை அக்டோபர் 31-இல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த சிலைதான் உலகிலேயே உயரமானது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்திருந்தார்.

ஆனால், சீனாவின் வசந்த ஆலயத்தில் 128 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த புத்தரின் சிலை, தற்போது 208 மீட்டர் உயரம் கொண்டதாக மாற்றியமைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதனால் உலகின் மிகப்பெரிய சிலை என்ற பெருமை குஜராத் அரசின் கையை விட்டுப் போகுமோ? என்ற அச்சம் எழுந்தது. இதனை பாஜக-வினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.யோசித்து யோசித்துப் பார்த்த அவர்கள், தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைய உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலையை, புத்தர் சிலையை விடவும் உயரமாக வைக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். முன்பு சிவாஜி சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல- 98 மீட்டர் உயரத்திற்குத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது அதனை 212 மீட்டர் உயரத்திற்கு அமைக்க முடிவு செய்துள்ள அவர்கள், இதன்மூலம் சிலைப் போட்டியில் சீனாவை வென்று காட்டுவோம் என்று சபதம் போட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.