திருப்பூர்,
திருப்பூரில் பணம் கொடுத்தல், வாங்கல் பிரச்சனையில் அதிமுக பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஸ்ரீநகர் காட்டன் மில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் திருப்பூர் மாநகராட்சி 28 ஆவது வார்டு அதிமுக இளைஞரணி செயலாளராக உள்ளார். உணவகம் நடத்தி வரும் இவர் அப்பகுதியில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் இளைஞர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வசூல் செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் திங்களன்று மதியம் அவரிடம் பணம் பெற்ற சிலரிடம் வசூல் செய்ய சென்றுள்ளார். அப்போது, இளங்கோவிற்கும் கடன் பெற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளங்கோவை தொடர்ந்து வந்த இளைஞர்கள் மூன்று பேர், திருநீலகண்டபுரம் இரண்டாவது வீதி அருகே வரும்போது ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். இதில் இளங்கோரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவத்தை கண்டித்து இளங்கோவின் நண்பர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இளங்கோவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் ஆணையர் அண்ணாதுரை தலைமையிலான காவல் துறையினர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.