சென்னை,
தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக குட்கா வியாபாரி மாதவராவ் பங்குதாரர் கள் குமார், சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்ளிட்ட 5 பேரிடமும் மேலும் பல தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது சிபிஐ தரப்பில் 7 நாட் கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததால் மாதவராவ், அவரது பங்குதாரர்களான உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். 5 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 நாள் விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையில் ரெய்டு
மாதவராவ் மனைவி லட்சுமி காயத்திரிக்கு சொந்தமான சோப்பு ஆயில் தயாரிக்கும் நிறுவனமான சீனிவாசா கெமிக்கல் கம்பெனி புதுச்சேரியை அடுத்துள்ள திருபுவனையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிறுவனத்தில் பணி புரிந்து வரும் மேலாளர் தனபால், கணக்காளர் பாலு மற்றும் சுப்பையாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், குட்கா பதுக்கப்பட்டது குறித்து எந்தவித தடயங்களும் கிடைக்காததால் மேலாளர், கணக்காளர்களை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை செய்தது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.