தேனி :

காவல்துறை பெண் உயர் அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடியான புல்லட் நாகராஜன் இன்று பெரியகுளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என பல வழக்குகள் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக இருந்த நாகராஜனின் அண்ணன் சிறையிலிருந்தபோது தூக்கமாத்திரை உட்கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததால் அங்கு பரிசோதனைக்கு வந்த மருத்துவரிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். இதனால், மதுரை சிறைத்துறை பெண் எஸ்.பி ஊர்மிளா காவலர்களை கொண்டு நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளார்.

விடுதலைக்கு பின்பு இதுபற்றி நாகராஜனிடம் அவரது அண்ணன் கூறியதை அடுத்து புல்லட் நாகராஜன் பெண் எஸ்.பி ஊர்மிளாவுக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்தார். அதுமட்டுமில்லாமல் பெரியகுளம் தென்கரை பெண் காவல் ஆய்வாளர் மதனகலாவுக்கும் போனில் எங்கள் ஆட்கள் மீது இனிமேல் கை வைக்க கூடாது என மிரட்டியுள்ளார். அப்படி செய்தால் அனைவரையும் வேட்டையாடுவேன் என்ற ஆடியோ பதிவுகளையும் நாகராஜன் வெளியிட்டிருந்தான்.

இதைத்தொடர்ந்து, சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவை மிரட்டிய வழக்கில் புல்லட் நாகராஜனை கைது செய்ய அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட தனிப்படை தேனி மாவட்ட பகுதிகளில் அவனைத் தேடி வந்தது. இந்நிலையில், இன்று பெரியகுளம் தென்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நாகராஜனை காவல்துறையினர் விரட்டிச் சென்று கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.