ஸ்ரீநகர்:
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவாவில், வன்கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உண்மையே என்று, உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளனர்.
இது சிறுமி வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவாவைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆர்எஸ்எஸ் – பாஜக உள்ளிட்ட அமைப்புக்களைச் சேர்ந்த இந்துத்துவா பேர்வழிகள் 7 பேரைக் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் காவல்துறை அதிகாரிகள் ஆவார். புகாரின்பேரில் உடனடி நடவடிக்கை எடுக்காதது; சாட்சியங்களை கலைக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.முதலில், கதுவா மாவட்ட நீதிமன்றத்தில்தான் வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், சிறுமியின் பெற்றோர் இதை விரும்பவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறுமி வழக்கை, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றியது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் ஜம்மு – காஷ்மீர் காவல்துறையினரால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பதான்கோட் நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், சிறுமியின் உடலை பிரதேப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், சிறுமி இறப்பதற்கு முன்பு, பலரால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும், பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக சிறுமி இறந்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.