திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், ஜடேரி கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நாமக்கட்டி தயாரிக்கும் தொழிலில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பல ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ஏரியிலிருந்து வெள்ளை மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், ஜடேரி கிராமத்தில் 125 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர் கள் பரம்பரை, பரம்பரையாக நாமக்கட்டி தயாரிக்கும் தொழில் செய்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வருகிறார்கள். ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பதி, சிறீரங்கம், பழனி உட்பட பல்வேறு கோயில்களில் பயன் படுத்தப்படும் நாமக்கட்டிகள் ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். அந்தளவிற்கு சிறப்பு பெற்றது ஜடேரி கிராமம். மேலும், ஜடேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக் கள் நாமக்கட்டி தயாரிக்கும் தொழில் மட்டும் அல்லாமல், விவசாயம் செய்தும் தங்கள் குடும்பங்களை காப்பாற்றி, குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்கள்.

இவர்கள் நாமக்கட்டி தயாரிப்பதற்கு வெள்ளை மண் பயன்படுத்தி வருகிறார்கள். இம்மண் இப்பகுதியில் உள்ள ஏரியில் மட்டும் தான் கிடைக்கிறது. நாமக்கட்டி தயாரிக்கும் போது முதலில் வெள்ளை மண்ணை தூள்களாக்கி, அகழி அமைத்து அதில் தண்ணீர் ஊற்றி மாடுகள் பூட்டி செக்கினால் கட்டப் பட்ட பாறை உருளை மூலம் ஒரு நாள் முழுவதும் ஓட்டி, அதனை 30 நாட்களுக்கு நீரில் வைத்து பதப்படுத்தி அதிலிருக்கும் மண்ணை எடுத்து, பசை போல உள்ளவற்றை தனியாக பிரித்து காயவைக்கிறார்கள். அதன் பின்னர் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிரியவர்கள் என அனைவரும் சேர்ந்து அந்த பசையினை நாமக்கட்டிகளாக பல அளவுகளில் உருட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். ஒரு குழியில் போடப்பட்ட வெள்ளை மண் மூலமாக 4 மூட்டைகள் அடங்கிய 12,000 நாமக்கட்டிகள் தயாரிக்கிறார் கள். இந்த மூட்டைகள் சந்தையில் ஒரு மூட்டைக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஜடேரி கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.6000 வரை வருமானம் கிடைக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக அருகில் உள்ள ஏரியிலிருந்து  வெள்ளை மண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்காததால், ஜடேரி கிராம மக்கள் பல் வேறு இடங்களுக்கு சென்று அதிக விலைக்கு வெள்ளை மண் வாங்கி வந்து நாமக்கட்டி தயாரித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் ஜடேரி கிராம மக்களின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு சென்றது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஜடேரி கிராமத்திற்கு சென்று, அருகில் உள்ள ஏரியிலிருந்து ஒரு வருடத்திற்கு வெள்ளை மண் எடுப்பதற்கு முதல் கட்டமாக 25 குடும்பங்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.