புதுதில்லி;
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மூலமாக மட்டும், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை, மக்களிடமிருந்து மத்திய பாஜக அரசு பறித்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் பக்தா சரண் தாஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராதபோதும், இந்தியாவில் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாயையும், டீசல் விலை 76 ரூபாயையும் தாண்டியுள்ளது. விரைவில் 100 ரூபாயை எட்டும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகள் மூலம் மத்திய அரசு 11 லட்சம் கோடி ரூபாய்களை மக்களிடமிருந்து சுரண்டியுள்ளதாக காங்கிரஸ் விளம்பரக்குழு உறுப்பினர் பக்தா சரண் தாஸ் கூறியுள்ளார்.

“2014-ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 107.09 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோலை 71 ரூபாய் 41 காசுகளுக்கும், டீசலை 55 ரூபாய் 49 காசுகளுக்கும் விற்பனை செய்தோம். தற்போதோ, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 51 காசுகளுக்கும், டீசல் 77 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. இது சரியா?”என்று பக்தா சரண் தாஸ் கேட்டுள்ளார். “மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ரூ. 11 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.