தீக்கதிர்

இறப்புக்கு பின்னும் வாழவைக்கும் முதியோர்…!

அனுபவம்

ஒருவர் இறந்துவிட்டால், அதுவும் வயதானவர்கள் இறந்து விட்டால், நமக்கு தாளாத துக்கம் தொண்டையை அடைக்கிறது. தம்கட்டி நிறுத்தினாலும் நிற்காமல் கண்ணீர் வருகிறது.ஏனெனில் வயது முதிர்ந்தவர்கள் இறக்கும் போது அவர்கள் அந்த குடும்பத்தை, பெற்ற குழந்தைகளை பாதுகாக்க வாழ்நாள் முழுவதும் பட்ட கஷ்டங்கள் நம் கண்முன் வந்து செல்லும், அதனால் தான் நம் கண்ணீரை அவர்களுக்கு காணிக்கையாக்குகிறோம்…!

ஆனால், ஒரு தாத்தாவோ அல்லது பாட்டியோ அல்லது பலரோ இறந்து விட்டார்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றால், “அப்பாடா? அடுத்த விண்ணப்பத்திற்கு பணம் போட்டுறலாம்.!” என்று நிம்மதி பெருமூச்சு விடும் ஒரு இடத்திற்கு சென்று வந்தேன்.நாம் மனிதர்கள் வாழும் உலகில் தான் வாழுகிறோமா? என்ற தாங்க முடியாத வெறுப்பு மிக்க மனவேதனையுடன் அங்கிருந்து திரும்பினேன். ஏனெனில் அந்த இடத்தில் பணிசெய்வோர் தங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் மனித மரணங்களை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அந்த இடம் அந்தியூர் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகம் ஆகும். வட்டாட்சியர் (சபாதி) அவர்களை சந்தித்து ஒரு வயதான பாட்டிக்கு (சுமார் 60 வயது இருக்கும்) விதவை உதவித்தொகை கேட்டு கொடுத்த விண்ணப்பம் குறித்து விபரம் கேட்டபின்பு தான் நினைத்தேன் நாம் இங்கு வராமல் இருந்திருக்கலாமோ.! என்று…அந்தியூர் தாலுக்காவில் மாதம் 15,000 பேருக்கு மேல் ஒரு நபருக்கு கூடுதலாக மாத ஓய்வூதிய உதவித்தொகை அனுப்பினாலும்கூட அனைவருக்கும் சேர்ந்து உதவித்தொகை நின்று விடும் என வட்டாட்சியர் (சபாதி) தெரிவித்தார்.

“அப்போது எப்படி? புதிய விண்ணப்பங்களுக்கு உதவித்தொகை அனுப்புவீர்கள் மேடம்.!” என நாம் கேட்டபோது அவர் சொன்ன பதில் தான் நம்மை தூக்கி வாரிப்போட்டது.ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய ஓய்வூதிய உதவி கோரும் விண்ணப்பங்களை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருப்பார்களாம். ஏற்கனவே ஓய்வூதியம் வாங்கும் யாராவது இறந்து விட்டால் புதிய விண்ணப்பதாரரை அந்த கணக்கில் சேர்த்து விடுவார்களாம்.இதிலும் கூட பாவம் ஏற்கனவே ஓய்வூதியம் வாங்கும் முதியோர்கள் பலர் இறந்து விடுகிறார்கள். அதனால் முதியோர் ஓய்வூதிய புதிய விண்ணப்பங்கள் மாதம் ஒன்றிரண்டு பட்டியலில் சேர்ந்து விடுகிறது. ஆனால், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் இப்படிப்பட்டவர்களின் புதிய விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் காத்து கிடப்பதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் அந்த கேட்டகிரியில் இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு.

இதில் ஏதாவது ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பில்லையா? என்று கேட்டால் அது என் கையில் இல்லை, அது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றுதான் அவர் நிச்சயம் கூறுவார் என்பதை அறிந்த நானும் உடன் வந்த தோழரும் பாட்டியும் மூவரும் சேர்ந்து அவரிடம் மீண்டும் ஏதாவது உடனடி வாய்ப்பிருந்தால் ஆவன செய்ய வேண்டிக்கொண்டு விடைபெற்றோம்.

எதார்த்த நிலைமை இப்படி இருக்க, நம்ம மந்திரி மார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓடி ஓடி மக்கள் குறைகளை தீர்க்க முகாம்கள் நடத்தி “இது மக்கள் நல அரசு” என முதியோர், விதவை, கணவரால் கைவிடப்படவர்களிடம் ஓய்வூதிய விண்ணப்பங்களை பெறுவது தான் விசித்திரமாக உள்ளது.அவர்கள் பெற்ற ஒய்வூதிய விண்ணப்பங்கள் ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் ஒருவர் இறக்கும் வரையில் இவர்களின் ஆட்சியில் காத்திருக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும் என்பது மக்களுக்கு மட்டும் தெரியாது.”ஏமாளி தான் மக்கள்ன்னா?கோமாளிதான் ராஜாவாம்.!”என்ற பலங்கால பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது. இறந்தும்கூட அடுத்தவரை வாழவைக்கும் முதியவர்கள் தான் உண்மையான கடவுள்கள்.!

 ஆர்.முருகேசன்