கோயம்புத்தூர்:
ஊழல் தொடர்பான விவரங்களை வெளி யிட்டதற்காக ஆத்திரமடைந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள், பெண் செய்தியாளரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பவர் கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் சாக்கடை, சாலை, பாலம் என அனைத்துப் பணிகளுக்கான ஒப்பந்தங்களும் அமைச்சரின் உறவினர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெறுகிற திட்டங்களில் கே.சி.பி.எஞ்சினியர்ஸ், பி.செந்தில் அன்ட் கோ, வரதன் இன்ப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட அமைச்சருக்கு  நெருக்கமானவர்களின் நிறுவனங்களே இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் குறுக்கு வழிகளில் ஒப்பந்தத்தை கைப்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இதை மீறி ஒப்பந்தங்களைப் பெறும் இதர ஒப்பந்ததாரர், நிறுவனங்களின் திட்டப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் மேற்கொண்ட பணிகளுக்கு பணம் பெறுவதற்கு பெரும் இடையூறை அமைச்சரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

தீக்கதிர் செய்தி
இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன்பு, செந்தில் அன் கோ நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகளில் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு நடைபெற்றதும் அதனை ஆய்வு செய்ய இந்நிறுவனம் மேற்கொண்டு வரும் ஒப்பந்தப்பணிகள் குறித்த அனைத்து கோப்புகளையும் சென்னை நகராட்சி நிர்வாக அலு வலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது குறித்தும் தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதனை அன்றைய தினம் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி மறுத்தார்.

இதன்பின், கோவை வந்த நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், இது அலுவலகம் சார்ந்தவை; ஆகவே, இதனை செய்தியாளர்களிடம் தெரிவிக்க முடியாது என மழுப்பலாக பதிலளித்துச் சென்றார்.
இந்நிலையில், அமைச்சரின் பினாமி நிறுவனம் மேற்கொண்ட பணிகளில் நடை
பெற்ற ஊழல் குறித்து டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சியும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழும் முழுமையான ஆதாரங்களுடன் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.
இதனால், அமைச்சரின் பினாமி என கூறப்படும் சந்திரபிரகாஷ் என்பவர், செய்தி வெளியிட்ட பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் மற்றும் சுபீர் ஆகியோரை தொலைபேசி வாயிலாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் மிரட்டியுள்ளார்.

மேலும், இச்செய்தியை வெளியிட்ட ஊடகத்தினரை தாக்குவதற்கு கோவை யில் இருந்து அடியாட்கள் சென்னை சென்றுள்ளதாக சமூக வலைத்தளத்தில் வந்துள்ள தகவல் ஒட்டு மொத்த ஊடகத்தினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது.

மாதர் சங்கம் கண்டனம்
இச்செயலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.அமுதா, செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் எஸ்.ஜோதிமணி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதில், பெண் செய்தியாளரை மிரட்டும் அமைச்சரின் பினாமி சந்திரபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான ஊடகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவை சந்தித்து புகார் அளித்தனர். ஊழல் விவரங்களை வெளியிட்ட செய்தியாளர்களை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியுள்ள சந்திரபிரகாஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார மற்றும் தூய்மை பணியாளர் சங்கத்தின் சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.