===நிஷ்ரின் ஹுசைன்===
என் பெயர் நிஷ்ரின் ஹுசைன். மத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வாவில் பிறந்தவள். கந்த்வா என் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊர். என்னுடைய தாத்தா, அருகிலுள்ள ருஸ்டாம்பூர் என்னும் கிராமத்தில் விவசாயியாக இருந்தவர். தந்தை வழி தாத்தா புர்ஹான்பூரில் மருத்துவராக இருந்தார். அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தவர். இந்த நகரத்தைத்தான் தனது பூர்வீகமாக என் தாய் ஜாகியா ஜாப்ரி கூறுவார்.

எல்லா குடும்பங்களையும் போலவே, வேலைக்கும் படிப்புக்கும் இடையில் என் தந்தையின் குடும்பம் அல்லாடிக் கொண்டிருந்தது. இந்துக்களும் ஒரு சில இஸ்லாமிய குடும்பங்களுக்கு மத்தியில் இருந்ததை பாதுகாப்பாக அவர்கள் உணர்ந்திருந்தனர். பைக் ரிப்பேர் கடை வைத்திருந்த குபேர் சேத்துக்கும் காய்கறிக் கடைக்காரரான ராமா சேத்துக்கும் கணக்கு வழக்கு பார்த்துக்கொடுத்து சம்பாதித்துதான் சட்டப்படிப்புக்கான செலவையும் தன் செலவையும் என் தந்தை சமாளித்து வந்தார். மிக சாதாரண குடும்பச் சூழல்தான்; மிகச் சாதாரண இந்தியக் குடும்பம்தான்! இஸ்லாமியர்கள் என்பது மட்டும்தான் நாங்கள் கொண்டிருந்த வித்தியாசம்.

ஒரு நிலக்கரி ரயிலில் ஏறினோம்                                                                                                                                     1969ல் நிகழ்ந்த குஜராத் கலவரங்கள் எதிர்பார்த்திராத பேரழிவை கொடுத்திருந்தது. வன்முறை வெடித்த இரவை என் தாய் நினைவுகூரும் போது, தங்களுக்கென இருந்த ஒரே ஒரு கல்யாண படத்தைக் கூட அலமாரியிலிருந்து எடுக்க முடியாதஅளவுக்கு குறைவான நேரம் இருந்ததாக கூறுவார். நெருப்பு வைத்து, கொன்று, கொள்ளையடித்து வன்முறைக்கும்பல் நெருங்கி வந்தபோது என் பெற்றோர், தாத்தா-பாட்டி, மாமா, அத்தை எல்லோரும் எங்களுடன் சேர்ந்து ஓடி வந்தனர். தங்கள் குழந்தைகளின் கதி தெரியாமல் தேடி இருளுக்குள்ளும் குழப்பத்திலும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொலைந்தனர்.

ஐந்து வயது குழந்தையாக அப்போதிருந்த எனக்கு, இன்றளவும் அந்த இரவு ஞாபகம் இருப்பது எரிந்து கொண்டிருந்த இஸ்லாமிய வீடுகளாகத்தான்; தூரத்தில் இருந்தும் தெரிந்த நெருப்பின் பயங்கரம்தான். பல மணி நேரங்களாக இருட்டில் தண்டவாளத்தில் நடந்தோம். இறுதியில் ஒரு நிலக்கரி ரயிலில் ஏறினோம். உயிர் தப்பிய கூட்டத்தால் அந்த ரயில் நிரம்பியிருந்தது. பெரியளவில் உடைமைகள் இல்லையெனினும் அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டிருந்தன. பிறகு அகதி வாழ்க்கை தொடங்கியது. அகமதாபாத்தின் மெலெக்சாபான் மைதானத்தில் அந்த அகதிகள் கூடாரங்களையும் உணவுக்காக காத்திருந்த நீள வரிசைகளையும் கொண்ட எங்களின் நாட்கள் தொடங்கின.

கவனித்துக் கொள்ளுங்கள். நான் பிறந்த இந்த ஜனநாயக நாட்டில், அகதிகள் முகாமில் நான் தங்கியிருந்தது, ஏதோவொரு இயற்கை சீற்றத்தால் அல்ல. வெறுப்பு அரசியலால்! இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டதால்! வெறுப்பு பேச்சுகளால்! ஆர்எஸ்எஸ்சால், விஎச்பியால்!

என் தந்தையும் அவர் வழி குடும்பமும் அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். என் தாத்தா பாட்டி உட்பட, என் அப்பா, மாமா, அத்தைகள் அனைவரும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதாலும் ஆங்கிலேயரை எதிர்த்து ஊர்வலங்கள் சென்றதாலும் சிறைக்கு சென்றவர்கள்.

மீண்டும் தொடங்கினோம்
1969 கலவரங்களுக்குப் பின், என் தந்தை ஊருக்கு திரும்பி வாழ்க்கையை மீண்டும் அதே ஊரில் தொடங்க உறுதி கொண்டார். செய்தும் காட்டினார். அவர் குடும்பம் மற்றும் பக்கத்து வீட்டாரின் உதவியோடு வீட்டை திரும்ப கட்டியெழுப்ப ஊருக்குச் சென்றார். குபேர் சேத்தும் ராமா சேத்தும் தங்களின் கடைக்கு பின்னால் இருந்த ஒரு சிறு அறையில் என் பெற்றோர் தங்க இடம் கொடுத்தனர். என் தந்தையின் முயற்சிகளால் எங்கள் வாழ்க்கையை 1969க்கு பிறகு மீண்டும் தொடங்கினோம். நாங்கள் வளர்கையில் குழந்தைகளாக பக்கத்துவீடுகளில் தோழமைகளை உருவாக்கிக் கொண்டோம். பள்ளிகளுக்கு ஒன்றாக சென்றோம்.

பொது நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொண்டோம். 1983ஆம் வருடத்தில் என் திருமணத்துக்குப் பிறகு நான் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தேன். என் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தை என் பெற்றோருடன் அகமதாபாத்தில் கழித்தனர்.

ஆம், நான் இந்தியாவைப் பற்றித்தான் பேசுகிறேன்                                                                                                                      என் தந்தையின் உறுதியையும், நன்கொடையாகப் பெற்ற ஜெர்மனிய பாத்திரங்களையும் தாண்டி நமக்கு என்ன தேவை இருக்கிறதென என் தாய் அடிக்கடி சொல்வார். கடந்து வந்த கஷ்ட காலத்தை ஞாபகத்தில் இருத்தும் வகையில் நன்கொடையாக பெற்ற அப்பாத்திரங்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார். ஆனால் அவையும் 2002ஆம் ஆண்டில் என் தந்தையுடன் சேர்த்து எரித்து அழிக்கப்பட்டது. ஆம், என் நாடான இந்தியாவைப் பற்றித்தான் நான் பேசுகிறேன்; என் சொந்த ஊர் அகமதாபாத்தை பற்றித்தான் பேசுகிறேன்!

என் தந்தைக்கு உயிர் இருக்கையிலேயே…
எனக்கு நானே போராடி மறக்க முயன்றாலும் ஆறாத வடுவாய் அச்சம்பவம் மனதில் எழுகிறது. ஆர்எஸ்எஸ்/விஎச்பியுடன் தொடர்பில் இருந்த கும்பல், 73 வயதான முன்னாள் மக்களவை உறுப்பினரான என் தந்தை ஈசான் ஹூசைன் ஜாப்ரியை வீட்டிலிருந்து இழுத்துச் சென்ற கணத்தை நோக்கி என்மனம் செல்கிறது. பிப்ரவரி 28, 2002! என் தந்தையை அவர்கள் வெளியில் இழுத்துச் சென்றனர். சில அடிகள் தள்ளித்தான் ஒரு வளாகத்தின் வெளியே காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்தது. அந்த கும்பல் என் தந்தையை கொல்வதற்காக காத்திருப்பது போல் காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். என் தந்தைக்கு உயிர் இருக்கையிலேயே கால்களையும் கைகளையும் கும்பல் வெட்டியெடுத்தது. பார்த்தவர்கள் சொன்னபடி, இறுதியாக என் தந்தையின் தலையை அவர்கள் கொடிய வாளால் துண்டித்தனர். திரிசூலத்தில் தலையைத் தொங்கவிட்டு, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீகிருஷ்ணா’ என முழங்கியபடி ஊர்வலம் சென்றனர்.

உடல் பாகங்களை அவர்கள் எரித்துக் கொண்டிருக்கையில் கொள்ளை; வன்புணர்வு; கொலைகள்; சிறுகுழந்தை, ஆண்கள், பெண்கள் ஆகியோரை எரித்தல் என கொடிய பயங்கரங்களை கும்பலில் மிச்சமிருந்தோர் செய்து கொண்டிருந்தனர். எல்லாருமே வெட்டி, எரித்துக் கொல்லப்பட்டனர்.

எல்லா கடவுளரும் அமைதி காத்தனர்
அந்த நாள் முடியவேயில்லை. பதவிகளில் இருந்த அரசியல்வாதிகள் கொலைக்கும்பல்களை ஊக்குவித்துப் பேசினர். ஆளும் பாஜக அரசின் ஆதரவோடு செய்தித்தாள்கள் எல்லாமும் பொய் பரப்பின. அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் தொடங்கி நரோடா பாட்டியா வரையிலும் எல்லா பகுதிகளிலும் – மொத்த குஜராத்திலும் உடல்களை டிரக்குகளில் கொண்டு சென்று, ஆதாரங்களை அழிக்க ஆழமான கிணறுகளில் போட்டனர். வானிலும் பூமியிலும் இருந்த எல்லா கடவுளரும் வீடுகளும் மக்களின் இதயங்களும் அமைதி காத்தன.

மொத்த குஜராத்தும் எரிக்கப்பட்ட போதும் பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் இறங்கி உதவிகள் கேட்டு ஓடியபோதும் உயரதிகாரத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ‘உங்களை காப்பாற்றுவதற்கான ஆணை எங்களுக்கு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை’ என கூறிக்கொண்டிருந்தனர். சொல்லப்பட்டவை யாவும் நடந்தவையே என்பதையும் எல்லாமும் பட்டப்பகலில் அரங்கேறியது என்பதையும் மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு பிறகு உறுதிப்படுத்தியுள்ளது.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிபயங்கரம்! ஆனால் இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருப்பது இதுதான். அரசியலாலும் அதிகாரத்தாலும் நாம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறோம். சமூகத்தின் ஒரு பகுதிக்கு நாம் செய்யும் கேடுகளால், வரும் காலங்களில் நம் குழந்தைகளே நம்மை அடையாளப்படுத்த விரும்ப மாட்டார்கள்.
என் தந்தை ஒரு வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் கவிஞர். அவர் எழுதிய ‘காண்டீல்’ (Qandeel) என்ற புத்தகத்தில் இந்தியாவை பற்றி, நம் ஒவ்வொருவர் இதயத்திலும் அன்பின் பேரார்வம் உள்ளது இதுவே என் தாய்நாடு இதுவே என் தாய்நாடு இதுவே என் தாய்நாடு என எழுதியிருந்தார்.

அரசியல் என்பது வெறுப்புக்கான விளையாட்டாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்து- இஸ்லாமியர் வெறுப்பை பரப்பியே தேர்தல்கள் வெல்லப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. நம் முன்னோர்கள் ஓர் அழகான அரசியல் அமைப்பை படைத்திருக்கின்றனர். அதன்படி வாழ்வோம்.

வெறுப்பை விதைக்கிற – படுபயங்கரங்களை அரங்கேற்றுகிற இந்துத்துவா கும்பல், அமெரிக்காவின் சிகாகோவில் இந்துக்களுக்கான மாநாட்டை செப்டம்பர் 7லிருந்து 9 வரை, ‘பொது நன்மைக்காகவும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளவும் இந்துகளுக்காக உருவாக்கப்படும் சர்வதேச மேடை’ என்ற போர்வையில் நடத்தின. வெறுப்பு விதைக்கும் இத்தகைய கும்பல்களின் பல தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரையின் வழியாக அவர்களின் வெறுப்பு அரசியலை நிராகரிக்கிறோம் என்கிற சேதியையும்; ஒட்டுமொத்த இந்துக்களையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை என்ற உண்மையையும் அம்பலப்படுத்துவதற்காக நிஷ்ரின் ஹுசைன் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

தமிழில்: ராஜ சங்கீதன்
Source: The Wire (https://thewire.in/communalism/the-daughter-of-ehsan-and-zakiya-jafri-writes-my-mother-my-motherland)

Leave A Reply

%d bloggers like this: