கடந்த 2017-18 ஆம் ஆண்டு முதல்காலாண்டோடு (ஏப்ரல் – ஜூன், 2017) ஒப்பிடுகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல்காலாண்டு (ஏப்ரல் – ஜூன், 2018) ஜி.டி.பி 8.2 சதவீத வளர்ச்சியைத் தொட்டிருக்கிறது. இது அரசு வட்டாரங்களில் மட்டுமல்லாது, கார்ப்பரேட் ஊடகங்களிலும் கொண்டாடப்படும் செய்தியாக மாறியுள்ளது. மோடியின் ‘‘கூர் மதிகொண்ட தலைமைக்கு’’ கிடைத்த வெற்றி, ‘‘இதுவரை காணாத இந்திய வளர்ச்சிக் கதையின் பாதை’’, ‘‘அதி வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்’’ என பல வகைகளில் கொண்டாட்டம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

உண்மையிலேயே, இதில் கொண்டாட இவ்வளவு இருக்கிறதா?  இதில் இரண்டு அம்சங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று, புள்ளி விவரம் சம்பந்தப்பட்டது. மற்றொன்று, இந்த விவரங்களுக்குப் பின்னணியில் இருக்கும் ஒட்டுமொத்தச் சூழ்நிலையினை எவ்வாறு பார்ப்பது என்பது குறித்தது.

பள்ளம் – பீட பூமி – உச்சம்!
ஒப்பிடப்படும் சென்ற ஆண்டின் (2017-18) முதல் காலாண்டு, ஜி.டி.பி விகிதம் 5.6 சத வீதமாக மிகவும் சரிந்து போன காலாண்டு. நடப்பு நிதி ஆண்டின் (2018-19) முதல் காலாண்டினை இதனுடன் ஒப்பிட்டால், இயல்பாகவே நடப்புக் காலாண்டு வளர்ச்சி மிகப் பெரிதாகவே தோன்றும். இந்த ஒப்பீட்டுப் புள்ளி விவரங்களின் இயல்புத் தன்மையினை பள்ளத்தாக்கு (Valley), பீடபூமி (Plateau), உச்சம் (Peak) என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். முந்தைய ஆண்டின் வளர்ச்சி உச்சத்தில் இருந்தால், நடப்பு ஆண்டில் ஓரளவு வளர்ச்சி இருந்தாலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் வளர்ச்சி, சற்று குறைவாகவே தோன்றும். கடந்த ஆண்டின் வளர்ச்சி பீட பூமியாக (சற்று நிதானமான வளர்ச்சியாக) இருந்தால், இவ்வாண்டு வளர்ச்சியும் சற்று நிதானமான வளர்ச்சியாகத் தோன்றும். சென்றஆண்டின் வளர்ச்சி, பள்ளத்தாக்கில் இருந்தால், இந்த ஆண்டின் வளர்ச்சி மிகப் பெரிதாக தோற்றமளிக்கும்.

ஒரு மனிதன், தன்னை விட உயரமான வன் அருகில் நிற்கும் போது சற்று குட்டையாகவும் தனக்குச் சமமான உயரத்தில் இருப்பவனுடன் நிற்கும் போது அதிக மாற்றமில்லா மலும் தன்னை விட குட்டையானவன் அருகில்நிற்கும் போது உயரமாகவும் தோன்றுவது போன்றது தான் இதுவும். வளர்ச்சியின் அத்தகைய தோற்ற மாற்றம்தான், இவ்வாண்டின் முதல் காலாண்டில் நடந்திருப்பது. இதை பொருளாதார அறிஞர்கள்அடிப்படை ஆண்டு விளைவு (Base Year Effect) என அழைப்பார்கள். பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு கொண்டவர்கள் எவரும் இந்த ஆண்டின் ஜி.டி.பி வளர்ச்சி யினைக் கொண்டாடமாட்டார்கள். இன்னும் கூடச் சொல்லப் போனால், ஜி.டி.பிவளர்ச்சிப் புள்ளிகள், இரண்டு ஆண்டு களுக்கு முன்னர் இருந்த இடத்தை மீண்டும்தொட்டிருக்கின்றன. இதிலும் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை.

‘அதிவேக வளர்ச்சி’-பொருள் என்ன?
இந்த அதிவேக வளர்ச்சியும் நமக்குப் புதிதல்ல. ஐ.மு.கூட்டணி-2 அரசின் சாதனையும் வேதனையும் இது தானே? வேலைகள் உரு வாகாத வளர்ச்சி தானே அந்த அதிவேக வளர்ச்சி? இந்திய உழைக்கும் படையின் அளவு தொடர்ந்து சுருங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1.2 கோடி பேர் வேலை தேடுபவர்களாக மாறி வருகின்றனர். வேலை இல்லாப் பட்டாளம் பெருத்து வருகிறது. அது தானே உண்மை?  ஜி.டி.பி உயர்கிறது. வேலைகள் சுருங்குகின்றன. ஜி.டி.பி எவ்விதம் உயர்கிறது என்பதில் தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது. எந்திர உற்பத்தியோ (மேனுபேக்சரிங்), அல்லதுகுறைந்தபட்சம் வேளாண் உற்பத்தியோ பெருகினால், வேலை வாய்ப்புக்கள் உயரும் சாத்தியம் உண்டு. ஆனால், மோடி அரசு அதற்கு செலவழிக்கத் தயாராக இல்லை.

தனியார் நுகர்வு!
இன்று நாம் காணும் ஜி.டி.பி வளர்ச்சி தனியார் நுகர்வுச் செலவுகள் உயர்வின் மூலம்
மட்டுமே எட்டப்படும் வளர்ச்சி. அந்த நுகர்வு மட்டும் இந்த முதல் காலாண்டில் 8.6 சத வீதமாக உயர்ந்திருக்கிறது. இந்திய நாட்டில் தனியார் நுகர்விற்கு ஒரு கணிசமான பங்கு உண்டு. இன்று நாட்டில் நடைபெறும் திரு மணங்களின் செலவுகளுக்கு உச்சவரம்பு வைத்தால் ஜி.டி.பி-யின் அளவு சுமார் 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பது ஒருகணக்கீடு. ஆனால், இந்த 2 சதவீத ஜி.டி.பி,வேலை வாய்ப்புக்கள் எதனையும் பெரிதாக உருவாக்குவதில்லை என்பது தான் உண்மை. போக்குவரத்து நெரிசலில் செலவாகும் எரிபொருள் கூட, ஜி.டி.பி உயர்விற்கு உதவக் கூடும். இது மக்களின் நல்வாழ்விற்கு என்ன பங்களிப்பை செலுத்துகிறது என பிரான்சு நாட்டின் முந்தைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி கேட்டது இங்கு நினைவிற்கு வருகிறது. எனவே ஜி.டி.பி உயர்வு மொத்தத்தில் மக்களின் மகிழ்ச்சியாக மாறுவதாகக் கொள்ள முடியாது.

முடங்கிக் கிடக்கும் அரசு!
அரசின் பொதுச் செலவினங்கள் மொத்த ஜி.டி.பி மதிப்பில் 11.8 சதவீதம் என, தேங்கி நிற்கிறது. இது தான் சென்ற ஆண்டின் முதல் காலாண்டிலும் நிலைமை. சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி மதிப்பில் 54.7 சதவீதமாக இருந்த தனியார் செலவுகள், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 54.9 சதவீதமாக மிகச் சிறிய அளவில் உயர்ந்திருக்கிறது. ஆனால், வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில், பொதுச் செலவினங் களை அதிகரிப்பதற்கு அரசு தயாரில்லை. அவ்வகையில் அரசு முடங்கிக் கிடக்கிறது.

வருமானம்?
உண்மைப் பொருளாதாரத்தில் வேலைகள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவில் வரு மானத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. நாட்டில் வருமானம் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் ஊதியங்கள், பல மாநிலங்களில் குறைந்தபட்சக் கூலி ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் இல்லை. அரசு ஊழியர்களின் ஊதியங்களே அந்தக் குறைந்த பட்சத்தில் தான் துவங்குகின்றன. அதனால் தான் இரயில்வேயில் 1 லட்சம் வேலைகளுக்கு 2.8 பேர் மனு செய்திருக்கின்றனர்.  விவசாய வேலைகளிலும் கூலி தேக்க மடைந்து நிற்கிறது. இந்த நாட்டில் 15 கோடி விவசாயத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். கிராமப்புற வேலைகளில் இவர்களின் பங்கு 55 சதவீதம். 2014 -15 க்கும் 2016 -17க்கும் இடைபட்ட காலத்தில் இவர்களது உண்மை ஊதி யங்களின் – அதாவது, பணவீக்கத்துடன் நேர்செய்யப்பட்ட ஊதியங்களில் உயர்வு வருமாறு:-

உழவு 1.7 சதவீதம், விதைப்பு, நாற்று நடவு,களையெடுத்தல் 3.1 சதவீதம், அறுவடை, தூற்றுதல், மற்றும் சூட்டடி 0.5 சதவீதம், வேலைத்திறனற்ற கூலி 2 சதவீதம். இவ்வளவு நுண்ணளவிலேயே கூலி உயர்ந்திருக்கிறது. விவசாயிகளின் நிலைமை உலகறியும். இடுபொருள் செலவில் கடுமையான உயர்வும், கட்டுபடியாகாத விளைபொருள் விலைகளும் அவர்களது வருமானத்தை வெட்டிச் சுருக்கிவிட்டன. இந்த நிலைமை தான் 12 மாநிலங்களில் விவசாயிகளை வீதியில் இறங்கிப்போராட வைத்திருக்கிறது. இந்தப் பின்புலம் தான் தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்களை அனைத்திந்திய அளவில் ஒன்றுபடுத்திய செப்டம்பர் 5 தில்லி பேரணி.இப்போது சொல்லுங்கள் இது தான் வளர்ச்சியா?

இ.எம். ஜோசப்தகவல் ஆதாரம் – சுபோத் வர்மா கட்டுரை –
தி வயர் – 01.09.2018

Leave a Reply

You must be logged in to post a comment.