சென்னை :

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி திங்களன்று நாடு ழுமுவதும் பொதுவேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள 2.35 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெட்ரோலிய விலை உயர்வை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி செப்.10 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்திற்கு 14 சங்கங்களைக் கொண்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டமைப்பு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம் (சிஐடியு) ஞாயிறன்று (செப்.9) செய்தியாளர்களிடம் கூறியதாவது : கச்சா எண்ணெய் 124 டாலராக இருந்த போது 82 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. 78 டாலராக குறைந்தபோதும் அதே 82 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோது அதற்கேற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்காமல் வரிகளை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கிறது. இதனை தவிர்க்க பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கு ஆதரவாகவும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்தும் செப்.10 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முழுமையாக பங்கேற்பார்கள். பள்ளி ஆட்டோக்கள், டாடா மேஜின், அபே உள்ளிட்ட வாகனங்களும் இயங்காது. பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும்.

மாநில அரசு முத்தரப்புக் குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒரு முறை மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், இலவச ஜிபிஆர்எஸ் மீட்டரை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். வேலை நிறுத்தத்தையொட்டி சென்னை அண்ணாசாலையில் தாராப்பூர் டவர் அருகே மறியல் நடைபெறும். இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார். இச்சந்திப்பின்போது அமெரிக்கை நாராயணன், வி.சி.முனுசாமி (ஐஎன்டியுசி), மு.சம்பத், சுந்தரம் (ஏஐடியுசி), பாட்சாபாபு (எல்பிஎப்), ஜெயகோபால் (சிஐடியு), முருகன் (எச்எம்எஸ்), பி.குப்பன் (அம்பேத்கர் சங்கம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.