திருப்பூர்,
எரிபொருள் விலையேற்றத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், அதற்கு துணை போகும் மாநில அரசையும் கண்டித்து திங்களன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்த முழு அடைப்புப் போராட்டத்தை வெள்ளகோவில் வட்டாரத்தில் முழுமையாக வெற்றி பெறச் செய்வதென்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வெகுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும்,இந்த விலை உயர்வை கட்டுக்குள் வைக்காமல் இந்தியப் பொருளாதாரத்தையே பாடாய்படுத்தி வெகுமக்களின் அன்றாட வாழ்கையைச் சீர்குலைத்து வரும் மத்திய பாரதிய ஜனதா அரசைக்கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா முழுவதும் செப்டம்பர் 10 திங்கட்கிழமை ஒருநாள் முழுஅடைப்புக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதையடுத்து தமிழகமெங்கும் எதிர்க்கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்தின் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில் முழுஅடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் வெள்ளகோவில் நகர, ஒன்றிய அனைத்துக் கட்சிகள் சார்பில் வெள்ளகோவில் கோவை சாலை அண்ணா மன்றத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு

வெள்ளகோவில் நகர திமுக செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். வெள்ளகோவில் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் நடராஜ் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் வட்டகுழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ரவி,மதிமுக நகர செயலாளர் ராம்குமார், கொமதேக வெள்ளகோவில் ஒன்றியச் செயலாளர் லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு வணிகர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.