தாராபுரம்,
தாராபுரத்தில் வெறிநாய் கடித்து ஒன்னரை வயது குழந்தை உள்பட 28 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் பூக்கடை கார்னர் பகுதியில் வெறிநாய் சுற்றி கொண்டு இருந்தது. ஞாயிறன்று எதிரே வந்தவர்களை கடித்து குதறியது. நாய்க்கடிக்கு ஜின்னா மைதானத்தை சேர்ந்த ஆயிஷா பீவி (65), பர்க்கத் அலி (21), அம்ஜத் அலி என்பவரது ஒன்னரை வயது மகன் ஆதிலன் மற்றும் பஜனைமடத்தெருவை சேர்ந்த சுப்பிரமணி (54), வசந்தி (45), பாபு (50), நேரு நகரை சேர்ந்த திருமூர்த்தி (46), சரஸ்வதி (32), ஜவுளிக்கடைவீதியை சேர்ந்த கிருஷ்ணமுர்த்தி (55) உள்பட 28 பேரை வெறிநாய் கடித்தது.  இந்நிலையில், வெறிநாயை ஜின்னா மைதானம் அருகே பொதுமக்கள் அடித்து கொன்றனர். மேலும், வெறிநாய் கடிக்கு ஆளான 28 பேரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிகிச்சைக்கு பின் 6 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்ததும் தாராபுரம் எம்எல்ஏ காளிமுத்து அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் தாராபுரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு தெருவிலும் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றிக்கொண்டு வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.