சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை அனுப்ப தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவைக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிறன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்குப் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் அமைச்சரவை முடிவுகள் குறித்து கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களில் தன்னை முன்விடுதலை செய்யக் கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 161-ன் படி, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களது விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மற்ற 6 பேரும், தங்களை முன்விடுதலை செய்யக் கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த பரிந்துரை காலதாமதம் இன்றி உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அண்ணா அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு, அவரது பெயரை சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலையில் நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாகும். எந்தவிதமான தாமதமும் இன்றி ஆளுநருக்கு உடனடியாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய விஷயத்தில் ஆளுநர் தாமதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. தமிழக அமைச்சரவையின் இந்த பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். 7 பேர் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வலுச்சேர்த்துள்ளது.  இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: