ஈரோடு,
சத்தியமங்கலத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவரை நியமித்து தரம் உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அரசு அண்ணா மருத்துவமனையானது பத்து ஏக்கர் பரப்பளவில் நூறு படுக்கை வசதிகளுடன் 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1.5 லட்சம்மக்களுக்கான தாலுகா தலைமை மருத்துவமனையான இங்கு தினமும்500 புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். பெயரளவில் மட்டும் தான் தாலுகா மருத்துவமனை ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கவேண்டிய வசதிகள் கூட இங்கு இல்லை என்பது தான் பெருந்துயரம். தலைமை மருத்துவர் பணியிடம் கடந்தஆறு மாதமாகவே காலியாக உள்ளது. இதனால் நிதியைக் கையாள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இம்மருத்துவமனைக்கென நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் 13  பேர். இங்கு இருப்பதோ ஐந்து பேர் மட்டுமே. மீதமுள்ள எட்டு பேரில் ஆறுபேர் வேறு அரசு மருத்துவமனையில் பொறுப்புப் பணி வகிக்கின்றனர். வேடிக்கை என்னவெனில் இரண்டு மருத்துவர்கள் இங்குமில்லை, வேறு பொறுப்புப் பணியும் பார்க்கவில்லை.மருத்துவமனையில் விசாரித்தால்இரு மருத்துவர்கள் பணிக்கே வராமல்தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

மேலும், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்த வங்கி, எலும்பு மருத்துவர் இன்மை, போதிய மருத்துவர்களும், கண்காணிப்பும், தேவையான வசதிகளும் இன்மையால் தாளவாடி உள்ளிட்ட நெடுந்தொலைவிலிருந்து அவசர சிகிச்சைக்கு கூட கோவைக்கும், ஈரோட்டிற்கும்தான் பரிந்துரை செய்கிறார்கள். இது சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இல்லாமல் பரிந்துரைக்கும் இடமாக உள்ளதால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு வேறு மருத்துமனைக்கு பரிந்துரை செய்வதை தவிர்த்து அனைத்து மருத்துவர்களையும் நியமித்து அனைத்து வசதிகளுடன் இம்மருத்துவமனையை தரம் உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.