மதநூல்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும், மரணத்துக்குப் பிறகு வேறு ஒரு உலக வாழ்க்கையும் கிடையாது, மறுபிறவி என்பதும் கிடையாது. ஆகவே ஒவ்வொருவருக்கும் தற்செயலாய்க் கிடைத்திருக்கும் உயிர் வாழ்க்கையை முழுமையாகத் துய்க்காமல் முடித்துக்கொள்ளும் அவசரம் எவரொருவருக்கும் வரக்கூடாது. விவசாய வீழ்ச்சியால், வியாபார நெருக்கடியால், நோயின் கடுமையால், காதலுக்கு முட்டுக்கட்டையால் என்று என்னென்னவோ காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன. அவற்றில் மிகக் கொடுமையானது தேர்வில் தோல்வியடைந்ததால் அல்லது மதிப்பெண்ணில் பின்தங்கிப்போனதால் பள்ளிக் குழந்தைகள் செய்துகொள்ளும் தற்கொலைகள்தான்.மதிப்பெண் பெற்று வருவதே மரியாதை என்று கருதாத, அதற்காக நெருக்கடிகள் தராத புரிதல் உள்ளவர்களின் குழந்தைகள் கூட இந்த முடிவுக்குப் போகிறார்கள்.

அத்தகைய சிறுவர்களின் மனதில், தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தாழ்வெண்ணத்தை வீட்டுக்கு வெளியே உள்ள சமூகம் ஏற்படுத்துகிறதே! பள்ளி நிர்வாகங்கள், நண்பர்கள், முன்னிலை பெற்றவர்களையே முதன்மைப்படுத்தும் ஊடகச் செய்திகள், அவர்களை மட்டுமே கொண்டாடும் அமைப்புகள், மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குகிற ஏற்பாடுகள் எல்லாமாகச் சேர்ந்து அந்தத் தாழ்வு மனப்பான்மையைக் கெட்டிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.மற்ற பல பெற்றோர்களோ, குழந்தைகளின் மதிப்பெண் பின்னடைவைத் தங்களுடைய கவுரவப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு குமைந்துபோகிறார்கள்.

பள்ளி விழாக்களில் அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக ஓடியதற்காக, நன்றாகப் பாடியதற்காக, நன்றாகப் பேசியதற்காகக் கோப்பைகள் பெற்றாலும், முதலிரண்டு மதிப்பெண்கள் பெற்றதற்காகப் பதக்கங்கள் வழங்கப்பட்ட பசங்களோடு இவர்களும் மேடையேறவில்லையே என்பதில் குறுகித்தான் போகிறார்கள். அந்தக் குமைச்சலையும் குறுகலையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். சிலர் மதிப்பெண் பட்டியல் வந்தவுடனேயே அந்த வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். பலர் உடனடியாக இல்லாவிட்டாலும் வெவ்வேறு நேரங்களில் பிள்ளைகளை எதற்காகவாவது திட்டுகிறபோது நல்ல மதிப்பெண் எடுக்காததைக் குத்திக்காட்டுகிறார்கள். தற்கொலை, வீட்டைவிட்டு வெளியேறுவது போன்ற விபரீதமான திருப்பங்களுக்குப் பிறகுதான் தங்களின் நாக்கில் சனி விளையாடிவிட்டதாகக் கதறுகிறார்கள்.

இதன் பின்னால் இருப்பது, மனிதக் குழந்தைகளை மைதானத்தில் மதிப்பெண் இலக்குகளை நோக்கிப் பாய்ந்தோடும் பந்தயக் குதிரைகளாகப் பரிணாம மாற்றத்தைச் செய்துகொண்டிருக்கும் கல்வி முறை. கல்வி வழங்கல் ஒரு வணிகச் சந்தை ஏற்பாடாக மாற்றப்பட்ட பிறகு, தனியார் நிர்வாகங்கள் தங்களின் வகுப்பறைக்குள் வருகிற குழந்தைகள் மதிப்பெண் அவயத்தில் முந்தியிருப்பது உத்தரவாதம் என்றுதான் விளம்பரமே செய்கின்றன. ‘நீட்’ போன்ற உயர்கல்வி நுழைவுத் தேர்வு முறைகள் அந்த உத்தரவாத வணிகத்திற்குச் செழிப்பான களத்தைக் கட்டித் தருகின்றன. இயற்கையாகவே குழந்தைகளுக்குள் விதையாக இருக்கும் மற்ற அறிவுத்திறன்களைத் துளிர்க்க விடுவதில்லை.மதிப்பெண் உயரங்களைத் தொட முடியாத பலரும், அதற்காகத் தங்களை வசைபாடாத பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றவர்களும் தருகிற ஊக்கத்தால் வெற்றிகரமான தொழில் முனைவோராக, வேளாண் விற்பன்னர்களாக, முன்னுதாரண வணிகர்களாக, ஈர்த்திடும் கலைஞர்களாக, எழுப்பிடும் எழுத்தாளர்களாக, விளையாட்டுச் சாதனையாளர்களாக, உண்மை சொல்லும் ஊடகக்காரர்களாகத் தடம் பதித்திருக்கிறார்கள்.

மக்களைத் திரட்டும் அரசியல் தலைவர்களாக, சமூக வழிகாட்டிகளாக அடையாளம் பெற்றிருக்கிறார்கள். அறிவின் அளவுகோல் மதிப்பெண்களில்தான் இருக்கிறது என்பதாக வரையறுத்துக்கொண்ட செயற்கையான விதிமுறைகளால், ஒவ்வொரு ஆண்டும் சமுதாயம் பல இயற்கையான ஆய்வாளர்களை, அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை, வரலாற்று அறிஞர்களை இழந்து வருகிறது.உயர் மதிப்பெண்ணும் எடுக்க முடியாதவர்களாக, இயற்கைத் திறனாளர்களாகவும் உருவாக முடியாதவர்களாகத் தடுக்கப்பட்ட குழந்தைகள் அந்த மனக்கசப்புக்கு மருந்தாகத் தூக்குக் கயிறையோ, உயிர்க்கொல்லி மருந்தையோ, தண்டவாளத்தையோ, மண்ணெண்ணை தீக்குச்சியையோ தேர்ந்தெடுக்கிறார்கள்.

இல்லையேல் வீட்டிலிருந்து வெளியேறுவதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதுவும் இல்லையேல் வீட்டுக்குள்ளேயே வில்லங்கங்களை ஏற்படுத்துகிற பிரச்சனைக்குரியவர்களாக மாறுகிறார்கள்.முதலில் குறிப்பிட்ட கயிறு, நஞ்சு, தண்டவாளம், தீக்குச்சி ஆகிய வழிகளை நாடிய மாணவர்கள் இந்தியா முழுவதுமாக 2014 முதல் 2016 வரையிலான மூன்றாண்டு காலத்தில் 26,476 பேர் என மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தது. ஏராளமான காரணங்கள் இருந்தாலும், அந்த மூன்று ஆண்டுகளில் 7,462 (கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு) மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் தேர்வுத் தோல்விதான் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.தேர்வு அச்சம் உள்ளிட்ட மன உளைச்சல்களைக் காதுகொடுத்துக் கேட்டு, ஆலோசனைகள் வழங்கித் தெம்பூட்டுவதற்காகக் கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசகர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை ஐஐடி போன்ற சில உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

இதர பல்கலைக்கழகங்களில் மாணவர் மனநலம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுவதற்கான வலுவான கட்டமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழகங்களிலேயே இதுதான் நிலைமை என்றால், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் எப்படி இருக்கும்?பொதுவிலேயே போதுமான மனநல வல்லுநர்கள் இந்தியாவில் இல்லை. நாடு முழுக்கத் தேவைப்படுகிற மனநல வல்லுநர்களில் 87 சதவீதம் பற்றாக்குறை இருப்பதாக, 2015 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தேசிய அளவிலேயே 3,800 உளவியல் மருத்துவர்கள் (சைக்கியாட்ரிஸ்ட்), 898 மனநல மருத்துவர்கள் (கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்), 850 மனநல சமூகப் பணியாளர்கள், 1,500 மனநல செவிலியர்கள்தான் இருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் குடிமக்களில் ஒரு லட்சம் பேருக்கு 5.6 மனநல வல்லுநர்கள் இருப்பது பாதுகாப்பானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 3 வல்லுநர்கள்தான் இருக்கிறார்கள். இந்த நிலவரப்படி நம் நாட்டுக்கு இன்னும் 66,200 சைக்கியாட்ரிஸ்ட்டுகள் தேவை. இந்த நிலையில் பல்கலைக்கழகங்களிலும் இதர கல்வி நிலையங்களிலும் முழுமையாகப் பயிற்சிபெற்ற மனநல ஆலோகர்களை நியமிக்க எங்கே போவது? மனச்சிக்கல்களில் தவிக்கும் மாணவர்கள் யாரை நாடுவது?தேர்வு முடிவுகள் வெளியாகிறபோது திரைப்படம், விளையாட்டு போன்ற துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள், மதிப்பெண்கள் மட்டுமே வெற்றியின் அடையாளம் அல்ல என்றெல்லாம் தொலைக்காட்சி மூலமாகச் சொல்கிறார்கள். பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாட்டில் நடக்கிற இத்தகைய விழிப்புணர்வு முயற்சிகள் நிச்சயம் பயனுள்ளவைதான்.

தற்கொலை முடிவை நாடாமல் தேர்வுப் பின்னடைவுகளை ஏற்றுக்கொள்கிற மாணவர்கள்தான் அதிகம்.அதற்காக, விபரீத முடிவுகளுக்குப் போகிற மாணவர்கள் சில ஆயிரம் பேர்தானே என்று விட்டுவிடுவதற்கில்லை. 18 வயது வரையில் குழந்தை/சிறார்ப்பருவம் என்று சட்டம் சொல்கிறது. அந்த வயது வரையில் ஒவ்வொருவரையும் பாதுகாக்கிற பொறுப்பு அரசுக்கும் சமுதாயத்துக்கும் இருக்கிறது. அந்தப் பொறுப்பை எப்படி நிறைவேற்றலாம்? சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம் என்பதால் அங்கிருந்தே தொடங்கலாம்.கலகலப்பான குடும்பத்தில் வளர்கிற குழந்தைகள் தற்கொலை மனநிலைக்குப் போவதில்லை அல்லது அத்தகைய குடும்பங்களில் இந்த முடிவை எடுக்கிற குழந்தைகள் மிகக்குறைவு என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் இறுக்கமாக இருக்கிற, ‘வெட்டி’ அரட்டைக்கு நேரம் ஒதுக்க மறுக்கிற, “நல்ல” பள்ளிக்கூடத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொடுத்துவிட்டால் போதுமென்று நினைக்கிற பெற்றோர்கள் இதை உணர வேண்டும்.பள்ளிப் பருவத்தில் பலதரப்பட்டவர்களோடும் பழகியதைத் தடுக்காமல் ஊக்குவித்த என் பெற்றோரை இப்போது நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

மகளோடும் மகனோடும் உட்கார்ந்து ‘ஏ’ ஜோக் உட்படப் பேசி அட்டகாசச் சிரிப்பொலியில் வீட்டையே மூழ்கடித்த என் நண்பனின் பெற்றோரை வியப்போடு நினைவுகூர்கிறேன். பள்ளிப் பாடப்புத்தக அட்டைகளுக்கு வெளியே படிப்பதற்கும் கற்பதற்கும் நிறைய இருக்கிறது. பிள்ளைகள் ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், “என்ன பாடப்புத்தகத்தைக் கையிலெடுக்காமல் இதைப் படித்துக்கொண்டிருக்கிறாய்” என்று திட்டாத பெற்றோர்கள், அந்தப் பிள்ளைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறார்கள். ஓவியம், விளையாட்டு, செடிகொடிகளைப் பார்வையிடுதல் போன்ற ஈடுபாடுகளை ஆதரிக்கிற பெற்றோர்கள் புதிய சாதனையாளர்கள் உருவாவதற்குத் துணை செய்கிறார்கள்.உறவினர்களின், நண்பர்களின் வீடுகளுக்குப் போகிறபோது, அங்குள்ள குழந்தைகளிடம் நமது கரிசனையைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டு, “நல்லா படிக்கிறியா” என்று கேட்கிறோமே, அதைத் தவிர்க்கலாம்.

இப்படிக் கேட்கிறவர்களிடமிருந்து தப்பிப்பதற்கே குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற உளவியலை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? எப்போதும் பெரியவர்கள் விசாரிக்கிறவர்களாகவும் சிறுவர்கள் விடையளிக்கிறவர்களாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன? குழந்தைகளோடு கதையடிக்கிறவர்களாகப் பெரியவர்கள் வளரட்டும்.மதிப்பெண்கள் மட்டுமே வெற்றியல்ல என்ற பொதுப்புத்தியை வளர்ப்பதில் அரசுக்குத் தலையாய பொறுப்பிருக்கிறது. பள்ளியிறுதித் தேர்வுகளின் மதிப்பெண்களில் உச்சத்தைத் தொடுகிறவர்களைத்தான் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் வரவழைத்துப் பாராட்டுப் பட்டயங்களும் பணமுடிப்பும் அளிக்கிறார்கள். மாநிலத்தின் மற்ற மாணவர்கள் அனைவரும் இப்படி மட்டம் தட்டப்படுகிறார்கள். இதுவே மாவட்ட அளவில் ஆட்சியர்கள் மூலமாக நடக்கிறது.ஒரு பின்னடைந்த கிராமத்திலிருந்து, ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, அமைதியாகப் படிப்பதற்கேற்ற சூழல்கள் மறுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வருகிற குழந்தைகள் மதிப்பெண் சாதனையை நிகழ்த்தக்கூடும். அவர்கள் மென்மேலும் வெற்றிப்படிகள் ஏற ஊக்குவிப்பதும், அவர்களைப் போன்ற மற்ற குழந்தைகளுக்கு நம்பிக்கையளிப்பதும் தேவைதான். அதற்குக்கூட, மற்ற குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாத அணுகுமுறையை வகுக்க வேண்டும்.பல்வேறு பொது அமைப்புகளும் இது குறித்து சுய ஆய்வு செய்தாக வேண்டும். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இளைஞர் குழுக்கள், மாணவர் சங்கங்கள், மாதர் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலியவை நடத்துகிற மாநாடுகள், விழாக்கள் போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல்களில் உயர் மதிப்பெண் சாதனையாளர்களுக்குத் தலைவர்கள் கரங்களால் விருது வழங்கப்படுவது நிச்சயம் இடம்பெறுகிறது.

இத்தகைய அமைப்புகளின் மாவட்டக் குழுக்களும், உள்ளூர்க் கிளை களும் நடத்துகிற விழாக்களில், அந்தந்தப் பகுதி அளவிலான பள்ளிகளில் உயர் மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.மதிப்பெண்களே அறிவின் அடையாளமல்ல என்பதை ஒப்புக்கொள்கிற, மதிப்பெண் தகுதி அட்டைகளுக்குப் பின்னால் மற்ற குழந்தைகளின் பன்முகத்திறமைகள் மறைக்கப்படுகின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிற, அறிவியல்பூர்வக் கண்ணோட்டமுள்ள அமைப்புகளும் இதைச் செய்கின்றன. இது குழந்தைகளிடையே போட்டித்திறனை வளர்க்கிறது, மற்ற குழந்தைகளைச் சாதனை புரியத் தூண்டுகிறது என்பதெல்லாம் ஒரு மாயைதான். விசுவாச ஊழியர்களைப் பொறுக்கியெடுப்பதற்காக வெற்றிக் குதிரைகளுக்கு வலைவீசுகிற உள்நாட்டு, பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் நோக்கத்திற்கு நாமும் ஏன் சேவை செய்ய வேண்டும் என்ற கோணத்திலும் இத்தகைய பரிசளிப்புகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தலாம். குழந்தைகளின் இயற்கையான பன்முகத் திறன்களையும் ஈடுபாடுகளையும் காலப்போக்கில் துருப்பிடிக்க வைத்துவிடுகிற தற்போதைய அதிகாரப்பூர்வ, சமூகப்பூர்வ ஏற்பாடுகளுக்கு முடிவுரை எழுதுவதற்கான முன்னுரையை எழுதத் தொடங்குவோம். தேர்வுத்தோல்வியால் தற்கொலை என்ற செய்தியைப் பழசாக்குவோம்.

  • அ. குமரேசன்

Leave a Reply

You must be logged in to post a comment.