சென்னை
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் செப்டம்பர் 10 (இன்று) மாபெரும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 10 திங்கட்கிழமையன்று இடதுசாரிக்கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மத்திய தொழிற்சங்கங்களும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் 2.3 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்றும் சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் மறியல் போர்:
மோடி அரசு கடைப்பிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன என்று இடதுசாரிக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் செப்டம்பர் 10 திங்களன்று நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மறியல் இயக்கம் நடைபெறவுள்ளது.

திங்களன்று காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணாசாலை, தாராபூர் டவர் அருகில் நடைபெறும் மறியல் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ(எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்துப்பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டுமெனவும், கட்சி அணிகள் முழுவதும் பங்கேற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.