சென்னை,
தரமான கல்வி, அறிவியல் பூர்வ சமமான கல்வி கேட்டு இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய பிரச்சாரப் பயணக்குழு கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் க்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அனைவருக்கும் தரமான, சமமான, அறிவியல் பூர்வ கல்வியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்ற முழக்கத்தோடு மாணவர் சங்கம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில் ஒருகுழுவும் அகர்தலாவிலிருந்து அகமதாபாத் நோக்கி ஒரு குழுவும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளன. இதன் ஒருபகுதியாக வடசென்னைக்கு வந்த பிரச்சாரக்குழுவிற்கு புரசைவாக்கத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ஆடல்பாடல், வீரசாகச கலைகள் நிகழ்த்தப் பட்டன. வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷாணு பேசுகையில், இந்தியாவில் பல மொழி, கலாச்சாரம், உடை, உணவு பழக்கவழக்கம் கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் தங்களுக்குள் வேறுபாடு இன்றிஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ்வகையறாக்கள் மக்களை துண்டாட நினைக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சி கையாள்கிறது. இந்து என்ற ஒற்றை மத அடையாளத்தோடு மக்களை அணுகுகிறது. ஒற்றை கலாச்சாரத்தை அனைவர் மீதும் திணிக்கிறது. பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற தேசமாக மாற்றி வருகிறது. “பாசிச பாஜக ஒழிக’’ என்று சோபியா என்ற மாணவி ஒலித்தற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அந்த குரல் இந்தியா முழுவதும் ஒலிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்களுக்கு ஆட்சியாளர்களால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மாற்றுக்கருத்து கூறுபவர்கள் நரவேட்டையாடப்படுகின்றனர். ஒரு விழுக்காடு கார்பரேட்டுகளுக்காக 99 விழுக்காட்டு மக்களின் நலனை காவு கொடுக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் சுயமரியாதையோடு வாழமுடியாத நிலையை இந்த அரசுகள் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. அரசு கல்வியை முறையை தகர்க்கும் பாஜகவினரை கேள்வி கேட்டால் நமக்கு தேசதுரோகி பட்டங்கள் கிடைக்கின்றன. சுதந்திரப்போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் தேசத்தை நேசிக்கிறவர்களை தேசவிரோதிகள்என்று அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. கல்வியை கடைசரக்காக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நாடுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மாணவர் சங்கம் களம் காணும் என்றார்.
வீ.மாரியப்பன்இந்திய மாணவர்சங்கத்தின்மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் பேசுகையில், இந்தியாவில் கோடிக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் தரமான கல்வி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தலித் மாணவர்களுக்கான கல்வி மான்யம் வெட்டப்படுகிறது.

அரசு தனியார் கல்விநிறுவனங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பது போல் அரசு கல்வி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. கருத்து சுதந்திரம் இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. “பாசிச பாஜக ஒழிக’’ என்ற இந்திய மாணவர் சங்கத்தின் குரலைத்தான் சோபியா ஒலித்துள்ளார். ஏழை மாணவர்களின் கல்விக்காக பிச்சை கூட எடுப்பேன் என்று கூறிய காமராஜர் துவக்கிய அரசுக்கல்வி நிறுவனங்களை இழுத்து மூட இந்த ஆட்சியாளருக்கு அதிகாரம் தந்தது யார். பல்கலைகழகங்களில் பேராசிரியர் பணிக்கு லட்சக்கணக்கிலும் துணைவேந்தர் பதவிக்கு கோடிக் கணக்கிலும் விலைபேசும் கேவலம் நடந்துவருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.கல்வி நிறுவனங்களில் ராகிங் கமிட்டியை அமைக்க துப்பில்லாத அதிமுக அரசை வீட்டிற்கு அனுப்பவேண்டும். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் பெண்கள் மீதான, சிறுபான்மை மக்கள்மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது. திருவண்ணாமலையில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி புகார் கொடுத் தால் அதன் மீது நடவடிக்கை எடுக் ்காத அரசு ஆட்சியை விமர்சித்தால் சிறையில் அடைக்கிறது. இந்திய மாணவர் சங்கம் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும், மாணவர்களின் நலனுக்காக களம்காணும் என்றார்.வரவேற்பு நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்டச்செயலாளர் ஆ.இசக்கி தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு வரவேற்றார். அகில இந்திய துணைத்தலைவர் வி.உச்சிமாகாளி, மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், துணைத்தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாநில நிர்வாகிகள் ஜான்சிராணி, காவ்யா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் தினேஷ், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் செந்தமிழ் செயலாளர் தமிழ்பாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.