திருப்பூர்,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற அவிநாசி தடகள வீரர் தருண் அய்யாசாமிக்கு ஞாயிறன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இந்தியா சார்பில் பதக்கங்களை அள்ளிக் குவித்தவர்கள் பட்டியலில் மிக முக்கியமானவர் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் தருண் அய்யாசாமி. “400 மீட்டர் தடை தாண்டுதல்” பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கமும், 4 பேர் அணியாக கலந்துகொண்ட தொடர் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கமும் என 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றார் தருண் அய்யாசாமி. இந்த வெற்றியின் மூலம் நாடு முழுவதும் பெரும் பாராட்டுக்கள் பெற்றார்.

இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தது. பிறகு தன் ஊரான திருப்பூர் அவிநாசி ராவுத்தம்பாளையத்துக்கு திரும்பிய தருண் அய்யாசாமிக்கு, அவரது ஊர்ப் பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். ஞாயிறன்று காலை அவிநாசி புதிய பேருந்துநிலையம் அருகே வந்த தருண் அய்யாசாமியை அப்பகுதி பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்ஆகியோர் மேள தாளங்கள் முழங்க மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது அவிநாசியை சேர்ந்த நகைக்கடை அதிபர் தருணுக்கு தங்க மோதிரத்தை பரிசளித்து மகிழ்ந்தார். அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கு தருணை அழைத்து சென்றார்கள். அங்கு தருணுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிய ஊர்வலம் ராவுத்தம்பாளையத்தில் உள்ள தருண் அய்யாசாமியின் வீடு வரை சென்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தருண் அய்யாசாமி, இந்திய நாட்டுக்காக பதக்கம் வென்றதுஅதிக மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் தனக்கு வேண்டிய முழு ஒத்துழைப்பை சிறப்பாக வழங்கியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: