“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபித்து வருகிறார் 17 வயதாகும் இளம் வீராங்கனை தீக்சா தாகர்”. குழந்தைப் பருவத்தில் கோல்ப் மட்டையை பிடித்த அவர், தனது 12 ஆவது வயதில் தொழில் முறை விளையாட்டாக விளையாடத் தொடங்கினார்.

‘நம்பர் ஒன்’ அமெச்சூர் கோல்ப், வீராங்கனை பட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டதால் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தவர்களில் தீக்சா தாகரும் ஒருவர். சீனா, தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா நாட்டு வீராங்கனைகளிடம் பெரும் சவாலை எதிர்கொண்டு 795 புள்ளிகளை குவித்து தகுதிச் சுற்றில் 7வது இடம் பிடித்தாலும் இந்திய வீரர்களில் அதிக புள்ளிகளை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அவரைப் பாராட்டாத உள்ளங்களே இருக்க முடியாது. டென்னிஸ், பேட்மிண்டன், நீச்சல் என பல விளையாட்டை விளையாடி வந்தாலும், அமைதியாக,நிதானமாக விளையாடும் விளையாட்டான கோல்ப் ஆட்டத்தையே தொழில் முறை விளையாட்டாக தேர்வு செய்தார் தீக்சா. தனது 12 வயதில், கோல்ப் சப் ஜூனியர் பிரிவில் முதன்முறையாக ஆட்டத்தை துவக்கினார். அன்றிலிருந்து வெற்றிகளை குவித்து வருகிறார். 15 வயது உட்பட்டோருக்கான பிரிவு மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுகளில் தொடர்ந்து இவர்தான் நம்பர் ஒன். 2015 ஆம் ஆண்டில் கிழக்கு இந்திய பெண்கள், ஜூனியர் தொடர், 2016 ஆம் ஆண்டு சண்டிகர் பெண்கள் மற்றும் ஜூனியர் சாம்பியன்ஷிப், இந்தியன் பால்டோ சாம்பியன்ஷிப் தொடர், கிழக்கு, மேற்கிந்திய பெண்கள் தொடர் மற்றும் ஜூனியர் பிரிவு, 2017ல் தெலுங்கானா பெண்கள் ஜூனியர் சாம்பியன்ஷிப், வடஇந்திய மற்றும் மேற்கிந்திய பெண்கள் சாம்பியன்ஷிப் என பல்வேறு தொடர்களில் பதக்கம் வென்று உள்ளூரில் மட்டுமின்றி, வெளியூர்களிலும் மகளிர் பிரிவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

சிங்கப்பூரில் 2018 ஆம் ஆண்டில் நடந்த போட்டி தான் அவர் முதன் முதலாக பங்கேற்ற வெளிநாட்டுப் போட்டி யாகும். தனிநபர் பிரிவிலும் குரூப் பிரிவிலும் முதலிடத்தை பிடித்த முதல் இந்திய வீராங்கனையும் இவரே. தாய் லாந்து, மலேசியா என பல்வேறு தொடர்களிலும் வெற்றி பெற்று கோப்பைகளுக்கு முத்தமிட்டார். உடல் ரீதியான குறைபாடுகள் வெற்றிப் பயணத்திற்கு தடைக் கல்லாக இருந்தாலும் மிக நீண்ட தூரத்துக்கு விரிந்து பரந்து கிடக்கும் பசுமை நிறைந்த மைதானமே உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து வருகிறது. அதையே வெற்றிப்
படிக்கட்டுகளாக மாற்றி, வெற்றிப் பாதையில் பயணிக்கும் அவரது வாழ்க்கை பயணமும் எதிர் கொள்ளும் சவால்களும் சாதாரணமானதல்ல. சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் தீக்சா தாகர் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளவர். பிறந்ததிலிருந்தே இரண்டு காதும் கேட்காது.

என்பதால் ராணுவத்தில் பணியாற்றி வரும் அவரது தந்தை நரேந்திர தாகரே பயிற்சி யாளராக மாறினார். தந்தை காகிதத்தில் எழுதிக் கொடுத்து கொடுக்கும் வார்த்தைகளை படித்து, மைதானத்தில் இருக்கும் சிறியபந்தின் மீது கவனம் செலுத்தி குழிக்குள் துல்லியமாக அடித்தாலும், அருகிலிருந்தவர்கள் எழுப்பும் கர வொலி மூலம் கூட தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு, உயர்தர காது கேட்கும் கருவி பொருத்தப் பட்டதன் மூலம் அந்த ஒலிகளை கேட்க முடிந்தது. தீக்சா-வின் சகோதரர் யோகேஷூம் செவிப்புலன் குறைபாடு கொண்டதால் பெற்றோர் மனம் உடைந்தனர். மகனும், மகளும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டியதால் தந்தையே குருவாக மாறினார். இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. தங்களது குழந்தைகளின் விளையாட்டுப் பயிற்சிக்காக சொந்த மாநிலமான ஹரியானாவில் இருந்து தில்லிக்கு மாற்றலாகினார்.

தீக்சா இடது கை பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இடது கையால் விளையாட பயன்படுத்தப்படும் கோல்ப் மட்டை மிகவும் விலை உயர்ந்தது என்பதோடு கிடைப்பதும் அரிது. ஒரு மட்டையின் விலை 3 லட்சம் ரூபாய் ஆகும். அதிக செலவு பிடிக்கும் விளையாட்டாக இருப்பதால் கோல்ப் இந்திய கூட்டமைப்பு மற்றும் இராணுவத்தின் உதவிகள் கிடைப்பதால் விளை யாட்டை தொடர்கிறார். தீக்சா இதுவரை பங்கேற்ற போட்டிகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்திலும் உடல்ரீதியாக குறைபாடுகள் இல்லாதவர்களுடனே போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். துருக்கியில் நடைபெற்ற செவிப்புலன் குறைபாடு உள்ளவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுகொடு த்து நாட்டிற்கு பெருமை சேர்த்தார். 12 ஆம் வகுப்பு படித்து வரும் தீக்சா, எனது திறமையைப் பற்றியே அனைவரும் பேசவேண்டும். உடல் குறைபாட்டைப் பற்றி பேசவேண்டியதில்லை என்கிறார். ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டாலும், விரைவில் அயர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை யிலும், இரண்டாண்டுகளில் நடக்க உள்ள ஒலிம்பிக் விளையாட்டிலும் பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து சாதனை படைக்க நாமும் வாழ்த்துவோம்!

Leave a Reply

You must be logged in to post a comment.