மதுரை :

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவேண்டுமென்ற சகிப்புத் தன்மை ஆட்சியாளர்களுக்கு இல்லையென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் கூறினார்.

தலித் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது, அடக்குமுறைகளைக் கண்டித்து மதுரையில் தமுஎகச, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

எமர்ஜென்சியை விட மோசமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எமர்ஜென்சி காலத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்தே கேள்விக் கேட்கப்பட்டது. அப்போது கூட வழக்கு போடவில்லை. இன்றைக்கு தமிழிசையை எதிர்த்துக்கூட கேள்விக் கேட்க முடியாத நிலை உள்ளது. கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டுமென்ற சகிப்புத்தன்மை ஆட்சியாளர்களுக்கு இல்லை. இந்திய நாடு ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. யாரும் எப்போதும் எதற்காக வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். கருத்து என்பது ஒரு வழிப்பாதையல்ல. அது இரு வழிப்பாதை. ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். பியுசில் அமைப்பைச் சேர்ந்த மதுரை பேராசிரியர் முரளி வீட்டில் காவல்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதில் மத்திய அரசை மிஞ்சி நிற்கிறது மாநில அரசு. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகிறது. நெடுவாசல், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களால் மக்களுக்கு அநீதி இழைக்கிறோம் என்ற எண்ணம் கூட அரசுக்கு இல்லை.

காவிரி பாசனப் படுகையில் இரண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் சென்றுசேரவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. கடைமடைப் பகுதியை பாலைவனமாக்கும் முயற்சி திட்டமிட்டு நடைபெற்றுவருகிறது. எட்டு வழிச்சாலைக்கே கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், 12 வழிச்சாலை அமைக்கப்போவதாக பேசிவருகின்றனர். இவர்களது பேச்சைப் பார்த்தால் தமிழகத்தில் விவசாயிகளும் இருக்கமாட்டார்கள், விளை நிலங்களும் இருக்காது வெறும் சாலை மட்டும் தான் இருக்கும் போலிருக்கிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் பேசியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களைவிட கூடுதலாக தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை ஈவுஇரக்கமின்றி நெரிக்கப்படுகிறது. சென்னையில் தமுஎகச கருத்துரிமை மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு உள்துறை செயலரிடம் அனுமதி பெற வேண்டுமென்கின்றனர். சுதந்திரத்தின் உள்ளடக்கம் இன்றைக்கு கேள்விக்குறியாகி உள்ளது. அறிவுச் சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்களை மிரட்டிப் பார்ப்பது, பணியவில்லையெனில் சுட்டுக்கொல்வது என்ற நிலைப்பாட்டை ஏற்கமுடியாது. ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விக் கேட்பவர்களையும் சிந்திப்பவர்களையும் கல்வி நிலையங்களிலிருந்தும் பணியாற்றுமிடங்களிலிருந்தும் அவர்களை வெளியேற்ற வேண்டுமென பாஜக நினைக்கிறது. நீதிபதிகள் கூட சுதந்திரமாகப் பேசமுடியவில்லை. நச்சுக் கருத்துக்களை கூறும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மாறாக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழங்கிய சோபியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத நம்பிக்கையை ஒரு போதும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் விட்டுத்தரமாட்டார்கள்.

சுதந்திரப் போராட்டத்தின் போது சென்னை மெரினாவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இன்றைக்கு அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அறிவுச் சமூகத்திற்கு எதிரான தாக்குதலை முறியடிக்க எழுச்சி தேவைப்படுகிறது. அறிவுச் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு எதிராக தமுஎகச குரல்கொடுக்கும். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.