திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே, பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, திலகர் நகர், பழங்கரை, திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம், பனப்பாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 55 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வியில் சிறந்து விளங்கும் இப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக கடும் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது.

பெரியாயிபாளையம் அரசுப் பள்ளியைச் சுற்றி தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இந்த தொழிற்சாலை, குடியிருப்புகளின் குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகள் பள்ளியை ஒட்டி தினந்தோறும் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் மாதக்கணக்கில் அப்புறப்படுத்தப்படாமல் மலை போல் குவிந்துள்ளது. இதனால் பள்ளி மற்றும் சுற்றுப்பகுதியிலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குவிந்துள்ள குப்பைக்கு மர்மநபர்கள் தீ வைத்து விடுகின்றனர். தீயினால் ஏற்படும் புகையால் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள் உண்டாகிறது.

இதுகுறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், குப்பைக்கு தீ வைப்பதால் கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றது. இதுபற்றி அவிநாசி வட்ட வளர்ச்சி அலுவலர் மற்றும் பழங்கரை ஊராட்சிச் செயலர் ஆகியோரிடம் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குப்பைத் தொட்டியை பள்ளியின் நுழைவாயில் அருகில் மாற்றி விட்டனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளும், கோழிக்கழிவுகளும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் காற்று வேகமாக வீசும்போது குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகள் பள்ளி மைதானத்துக்கு இழுத்து வரப்படுகிறது. இதை உண்பதற்காக நாய்கள் வருகின்றன. மேலும், குப்பைகளால் ஈக்கள் அதிகரித்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைக்குள்ளும் தொந்தரவு அதிகரித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்துக்கிறது. ஆனால், அந்த மாணவர்கள் பயிலும் பள்ளியின் சுற்றுச்சூழலே சுகாதாரமின்றி, ஈக்கள் தஞ்சமடையும் இடமாக உள்ளது என தெரிவித்தனர்.சமூக ஆர்வலர் பரமசிவம் கூறியதாவது: பழங்கரை ஊராட்சி நிர்வாகம், பள்ளி முன்பு குப்பை கொட்டுவதை ஆரம்பம் முதலே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் இன்றைக்கு குழந்தைகள் சிரமப்படு
கின்றனர். பெரியாயிபாளையத்தில் சுமார் 800 குடும்பங்கள் உள்ளன. ஊராட்சியின் சார்பில் குப்பைத் தொட்டிகள் தேவையான இடங்களில் வைக்காததால், பள்ளியின் நுழைவாயின் முன்பு குப்பையை கொட்டி அப்பகுதியை நாசம் செய்கின்றனர். மேலும், பின்னலாடை நிறுவனங்களும் தங்களுடைய கழிவுகளை கொட்டுவதால் குப்பைமேடாக மாறிவிட்டது. மாலைநேரங்களில் மதுப்பிரியர்கள் இயற்கை உபாதை கழிப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளியின் சுற்றுசூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாமும், ஊராட்சி நிர்வாமும் பள்ளியின் சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் வி.குமரேசன் கூறியதாவது: பள்ளி முன்பாக கொட்டப்படும் குப்பை அவ்வப்போது அகற்றிவந்தோம். ஆனால் தொடர்ச்சியாக குப்பை கொட்டுவது தொடர்ந்ததால், இது தொடர்பாக பழங்கரை ஊராட்சிக்கு கடிதம் கொடுத்துள்ளோம் என்றார். அவிநாசி வட்ட வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) டி.சாந்திலெட்சுமி கூறியதாவது: குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த முறையாக ஏற்பாடுகள் செய்கிறோம். பழங்கரை ஊராட்சி மூலம் அரசுப்பள்ளி பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மேலும், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் 3 ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற அவல நிலையைத் தவிர்த்திருக்கலாம், இனியாவது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுபெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.