தீக்கதிர்

இடியாய் இறங்கும் பெட்ரோல் குண்டு : மதுக்கூர் இராமலிங்கம்

உச்சம் என்கிற வார்த்தையை மிச்சம் வைக்க முடியாத அளவிற்கு அன்றாடம் பெட்ரோல் – டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. விலை உயர்வுக்கு எதிராக செப்டம்பர் 10 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு நல்கியுள்ளன. தொழில் நடத்த முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள லாரி உரிமையாளர்கள் பொது வேலைநிறுத்தத்தையொட்டி லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழா நடத்தினாலும் நடத்துவார்கள்:
ஆனால் மோடி அரசு அஞ்சாதவன், அசராதவன் என்பது போல ஞாயிறன்றும் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.83.66 ஆகவும், டீசல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.76.75 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. போக்குவரத்துக் கட்டணமும் சேரும்போது ஊருக்கு ஊர் இது மாறுபடும். சமையல் எரிவாயுவை விட்டுவிடக் கூடாது என்பதற்காக இம்மாதம் 1 ஆம்தேதி சிலிண்டருக்கு ரூ.32.50 உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை ரூ.838.50 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் சிலிண்டர் விலை ரூ.1000ஐ தொட்டு சதயவிழா கொண்டாட இருக்கிறது. அதுபோக, பெட்ரோல் விலையும் ரூ.100ஐ தொடும் காலம் நெருங்குகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் பாஜக சார்பில் அரசு செலவில் பிரம்மாண்டமான விழாக்களை நடத்தினாலும் நடத்துவார்கள். விளம்பரம் கிடைக்கும் என்கிற நப்பாசையில் ஊடகங்களும் அதற்கு லாலிபாடுவார்கள்.

பெட்ரோல் – டீசல் விலையை குறைப்பது இந்தியாவின் கையில் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் திருவாய் மலர்ந்துள்ளார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவோ இது 45 ஆண்டுகால பிரச்சனை என்றும், மாற்று எரிபொருள் குறித்து யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். அநேகமாக போக்குவரத்திற்கு மாட்டுவண்டியையும் சமையலுக்கு விறகு அடுப்பையும் மனதில் வைத்து பேசுகிறார் போலும்.பெட்ரோல் – டீசல் என்பது அன்றாட சமூக இயக்கத்தின் ரத்த ஓட்டம் போன்றது. இவற்றின் விலை உயர்வதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஒரு சுற்று உயரும். அரிசி, காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள், பால் உள்பட அனைத்தும் விலை உயரும். ஆட்டோ, டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறுவழியில்லை. அரசு போக்குவரத்துக் கழகங்கள் மேலும் ஒரு கட்டண உயர்வு செய்யக்கூடும். ரயில் கட்டணம் உள்பட அனைத்தும் ஏறுமயில் ஏறுவது போல ஏறுமுகத்திலேயே இருக்கும்.

கூச்சப்படாத மோடி
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் பிரச்சனையை மேலும் மேலும் சிக்கலாக்குகிறது. ஆனால் பிரதமர் மோடியோ, உலகிலேயே இந்தியாதான் மிக வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பேசிக் கொண்டேயிருக்கிறார். இந்த லட்சணத்தில் ‘வெல்ல முடியாத பாஜக’ என்ற கோஷத்தோடு வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளதாம். பெட்ரோல் – டீசல் – கேஸ் விலை உயர்வு ஒன்றே போதும் பாஜகவை படுபாதாளத்தில் வீழ்த்த. தோட்டத்தில் பாதிக் கிணறு என்பது போல மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி ஆகியவை பெட்ரோல் – டீசல் விலையில் 50 சதவீதம் ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் அதாவது 2014 – 15 முதல் 2017-18 வரை மோடி அரசு உற்பத்தி வரியாக ரூ.99 ஆயிரத்து 184 கோடி வசூலித்துள்ளது. இது முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வசூலித்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

அதேபோல, மாநில அரசுகள் வசூலிக்கும் வாட் வரி, 2014 – 15 இல் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 157 கோடியாக இருந்த நிலையில், 2017 – 18 இல் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 91 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி குறைக்கப்படுமா என்று கேட்டதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அதற்கு வாய்ப்பே இல்லை என்று கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்துள்ளார். ஆனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு காரணம் என்று ஆகாயத்தை நோக்கி கைகாட்டியுள்ளார்.

எதற்கும் தயாரில்லை பாஜக ஆட்சி
கடந்த காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைவாக இருந்த போதும், அதன் பலனை நுகர்வோருக்கு தராமல் வரியை உயர்த்திக் கொண்டே சென்று விலை குறையாமல் பார்த்துக் கொண்டவர்கள்தான் மத்திய ஆட்சியாளர்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது கடந்த 2014 நவம்பர் முதல் ஜனவரி 31ந்தேதி வரை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 9 முறை ஏற்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.77ம், டீசலுக்கு ரூ.13.47ம் உயர்த்தி ஆண்டுக்கு 1லட்சத்து 46ஆயிரத்து 838 கோடியை கூடுதல் வரி வருவாயாக சுருட்டிக் கொண்டது மோடி அரசு.  அப்போது அதுகுறித்து கேட்டதற்கு, கட்டமைப்பு வசதியைப் பெருக்க வரி உயர்த்தப்படுவதாகவும், கச்சா எண்ணெய் விலை உயரும்போது வரி குறைக்கப்பட்டு விலை உயர்வின் சுமை நுகர்வோரை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரி குறைக்கப்படவில்லை. குறைந்தபட்சம் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைத்தால் கூட சற்று விலை குறைய வாய்ப்பு உண்டு.

கடந்த காலங்களில் உற்பத்தி வரியை சற்று குறைத்து விலையை குறைக்க முயற்சித்தது உண்டு. அதற்கும் கூட பாஜக ஆட்சி தயாராக இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் பெட்ரோலுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறையை ரத்து செய்துவிட்டு, சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விலை தீர்மானிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் டீசலுக்கும் இதே முறையை கொண்டு வந்ததோடு, 15 நாட்களுக்கு ஒருமுறை விலை மாறும் என்ற நிலையை மாற்றி அன்றாடம் விலை தீர்மானிக்கப்படும் என்று மாற்றினார்கள். அடுத்தக்கட்டமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பெட்ரோல் – டீசல் விலை அறிவிக்கப்படும் என்று கூட சொல்வார்கள். சமையல் எரிவாயுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றாக ரத்து செய்துவிட்டு அதையும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்போவதாக மிரட்டி வருகிறது மத்திய பாஜக அரசு. இந்த லட்சணத்தில் சமையல் எரிவாயு மானியத்தை தாமாக முன்வந்து நுகர்வோர் விட்டுத்தர வேண்டும் என்ற நச்சரிப்பு வேறு. உண்மையில் மோடி பிரதமர் பதவியை தாமாக முன்வந்து விட்டுக் கொடுத்தால் கோடி புண்ணியமாகப் போகும் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் உலா வருகிறது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே காரணம் என்பது போல அடிக்கடி மோடி அரசு கூறுகிறது. ஆனால் ரிலையன்ஸ் எஸ்.ஆர். போன்ற நிறுவனங்களும் தற்போது பெட்ரோல், டீசல் நிலையங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எரிகிற வீட்டில் பறித்தது ஆதாயம் என அவர்களும் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு குறைந்த விலை
இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், இந்தியாவிலிருந்து மிகக்குறைந்த விலையில் வரியில்லாமல் வெளிநாடுகளுக்கு பெட்ரோல்-டீசல் ஏற்றுமதி செய்யப்படுவதுதான். வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு பெட்ரோலும், 21 நாடுகளுக்கு டீசலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.34, டீசல் விலை ரூ.37. இந்த ரகசியமும் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தான் வெளியே தெரிய வந்தது.

மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல் என்ற நிறுவனம் ஹாங்காங், மலேசியா, மொரிசீயஸ், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பெட்ரோல்-டீசல் ஆகியவற்றை குறைந்தவிலையில் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. இதேபோல பல்வேறு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரித்து குறைந்தவிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகசேவை செய்து கொண்டிருக்கின்றன. உலகிலேயே அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிற நாடுகளில் ஒன்றாகவும், ஏற்றுமதி செய்கிற நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருந்து வருகிறது. சுத்திகரிப்பு பெட்ரோல் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா 10 -ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2017ல் மட்டும் 24.1பில்லியன் டாலர் அளவுக்கு சுத்திகரிப்பு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் இதில் இந்தியாவின் பங்கு 3.9சதவீதமாக உள்ளது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் 150 லிட்டர் ஒயிட் பெட்ரோல், 150 லிட்டர் பெட்ரோல், 150 லிட்டர் டீசல், மண்ணெண்ணெய், கேஸ் ஆயில், தார், கிரீஸ் என 14 பொருள்கள் கிடைக்கின்றன. ஒரு பேரல் சுத்திகரிக்க மொத்தச் செலவு 100 டாலர் மட்டுமே. ஆனால் லாபம் 500 டாலருக்கு மேல் கிடைக்கிறது.

மர்ம தேசத்தின் ரகசியம் என்ன?
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 அளவுக்கு தர முடிகிறது. ஆனால் இங்கு வரி மேல் வரி போட்டு விலையை உயர்த்துகிறார்கள். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் அம்பானி போன்ற மோடியின் நண்பர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டால்தான் இந்த மர்மதேசத்தின் ரகசியம் தெரியும். உள்நாட்டு மக்களை பரிதவிக்கவிட்டுவிட்டு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உயர் தரத்தில் அதிக செலவு செய்து வரியில்லாமல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அளித்த தகவலின்படி ஆகஸ்ட் 20ந்தேதி வாக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுத்திகரிக்க இந்திய நிறுவனங்களுக்கு ரூ.35.90, டீசல் தயாரிக்க ரூ.38.25ம் செலவாகிறது. எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.37.91ம் டீசலுக்கு ரூ.41.04ம் விலையாக நிர்ணயிக்கிறது. இதனோடு வரி சேரும் போது இடியாக இறங்குகிறது.

வரி விதிப்பால் மோடி அரசுக்கு 11லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. சொந்த நாட்டு மக்களை இந்த அளவுக்கு வன்மத்தோடும், வஞ்சகத்தோடும் கசக்கிப்பிழியும் வேறொரு அரசை இதுவரை இந்தியா பார்த்ததில்லை.  இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தம், கடையடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று பாஜக பசப்புகிறது. இந்திய மக்களின் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருக்கும் இவர்களின் ஆட்சியை தொலைத்துக் கட்டுவதுதான் இந்திய மக்களின் தலையாயக் கடமையாக இருக்க முடியும். இன்றைக்கு ஒரு நாள் அனைத்து வாகனங்களின் சக்கரங்களும் சுழலாது நிற்கட்டும். அப்போதுதான் மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுற்றும்.