மோடி வகையறா அன்றாடம் உச்சரிக்கும் வார்த்தை ‘புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என்பதாகும். ஆனால் உண்மையில் அவர்கள் சொன்னபடி புதிய இந்தியா பிறக்கவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். புதுதில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தில் 2022 ஆம் ஆண்டில் புதிய இந்தியா உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி இந்த முழக்கம் தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கிற இந்தியாவை அன்றாடம் அலைக்கழித்து அழிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரம் புதிய இந்தியாவைஉருவாக்கப் போகிறதாம்.காவிக் கட்சியை தோற்கடித்துவிட முடியும்என எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்பதாகபாஜக அரசியல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முயல்வது ஒருபுறம் இருக்க, தனது கட்சியை வரும் தேர்தலில் தோற்கடிக்க பாஜகவே அனைத்து வேலைகளையும் மும்முரமாக செய்து வருகிறது. ஒருபுறத்தில் கார்ப்பரேட் ஆதரவாளர்கள் கொள்கைகளை பின்பற்றி ஏழை – எளிய மக்களை வதைப்பது, மறுபுறத்தில் பாசிச பாணியிலான ஆர்எஸ்எஸ் கொள்கைகளை திணித்து நாட்டின் மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை சிதைப்பதோடு, தலித் மற்றும் சிறுபான்மை மக்களை குறிவைத்து வேட்டையாடுகின்றனர். இந்த இரண்டு கேடுகளும் சேர்ந்து பாஜகவை தேர்தல் களத்தில் வீழ்த்தும் என்பது உறுதி. ஆனால் வெல்ல முடியாத பாஜக என்ற கோஷத்தோடு தேர்தலை சந்திப்போம் என்று சவடால் அடிக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட்டதாக கூறப் பட்டுள்ளது. பல்வேறு சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியை தழுவினாலும், பேரம் பேசுவது, விலைக்கு வாங்குவது போன்ற இழிவான உத்திகளை பின்பற்றித்தான் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதே வியூகம் மக்களவைத் தேர்தலில் எடுபடாது. பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் கூறும் பொய்களைக் கேட்டு மக்களுக்கு காதில் ரத்தம் வடிகிறது. கடந்த தேர்தலின்போது மக்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. கறுப்புப் பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் முதலீடு செய்வோம்; ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைதருவோம்; விவசாய விளைப் பொருளுக்கு உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை தருவோம் என்ற எந்தவொரு வாக்குறுதியையும் இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதேபோன்று வாய்ப்பந்தல் போட்டு இந்த முறை மக்களை ஏமாற்றிவிட முடியாது. தங்களது வாழ்க்கைப் பாடுகளிலிருந்தே மக்கள் இந்த ஆட்சியை எடைபோடுவார்கள். அப்படிபார்க்கும் போது, நிச்சயம் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசை மக்கள் வியூகம் வகுத்து வீழ்த்துவார்கள். 2022 ஆம் ஆண்டில் புதிய இந்தியா உருவாகும். அது காவி இல்லாத மதச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் இந்தியாவாகவே இருக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.