தீக்கதிர்

விவசாயம், தொழில்துறை, சமூகநலன், அண்டை நாடுகள் உடனான உறவு அனைத்திலும் மோடி அரசு தோற்றுவிட்டது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்…!

புதுதில்லி;
2014 தேர்தலில் உறுதியளித்தபடி ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே தரப்பட்டிருக்கின்றன; கறுப்புப் பணமாவது மீட்கப்பட்டிருக்கிறதா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, அடுக்கடுக்கான கேள்விகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் எழுதியுள்ள “உண்மையின் நிழல்கள்- தடமாறிய பயணம்” (Shades of Truth – A Journey Derailed) என்ற நூலின் வெளியீட்டு விழா, தில்லியில் வெள்ளியன்று நடைப்பெற்றது. இதில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளை, மிகக் கடுமையாகச் சாடி, மன்மோகன் சிங் பேசியிருப்பதாவது:
“வேளாண்துறையில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக கையாளவில்லை. மாநிலத் தலைநகரங்களிலும், நாட்டின் தலைநகரத்திலும் விவசாயிகள் தங்களின் உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் விவசாயிகளின் பொருள்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் உறுதி செய்யப்படவில்லை. விவசாயிகள் வேதனையில்தான் இருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். 4 ஆண்டுகளில் 8 கோடி பேருக்கு வேலை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இளைஞர்கள் வேலையில்லாமல் அல்லல்படுகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி விட்டோம் என்று பிரதமர் மோடிதான் புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறார். ஆனால், மக்கள் அதை நம்பத்தயாரில்லை. கடந்த 4 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லை என்பதுதான் உண்மை.

வேலைவாய்ப்பு வாக்குறுதி அளிக்கும் பொழுது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 4 ஆண்டுகளில் சரிந்துவிட்டது. தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவை தேக்கமடைந்துள்ளன. ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ ஆகிய திட்டங்கள் அர்த்தமுள்ள தாக்கம் எதனையும் தொழில்துறையில் ஏற்படுத்தவில்லை.
எளிதாக தொழில்செய்யும் நாடுகள் பட்டியலில் நாடு முன்னேறியிருக்கிறது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், சிறு, குறு நிறுவனங்கள் பலனடைந்ததாக தெரியவில்லை. மாறாக, பணமதிப்புநீக்க நடவடிக்கையால், சிறு, குறு தொழில்கள் நசிந்து அழிந்துவிட்டன. ஜிஎஸ்டி வரியும் முறைப்படி அமல்படுத்தாத காரணத்தால் வர்த்தக நிறுவனங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் வெளிநாட்டில் சட்டவிரோதமாக சேர்த்து வைத்துள்ள கறுப்புப்பணத்தை மீட்பேன் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் மோடி தெரிவித்தார். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் மிகுந்த அச்சத்துடன் வாழும் சூழல்தான் இருக்கிறது. ஜனநாயகத்தின் மதிப்புகளையும், மாண்புகளையும் மோடி அரசு மெல்ல மெல்லக் குலைத்து வருகிறது.

வாக்குறுதி அளித்த பின்பு

அண்டை நாடுகள் உடனான நட்புறவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை, நாட்டின் மாற்றத்திற்கு பயன்படுத்துவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளது. கல்வியாளர்களின் சுதந்திரம் கூட நசுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் சூழ்நிலை பதட்டமாக உள்ளன. இதெல்லாம் மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று. தற்போதைய சூழல், இவை குறித்தெல்லாம் ஆக்கப்பூர்வமாக, நாடு தழுவிய அளவில் விவாதம் நடக்க வேண்டியது அவசியம். அதனை கபில் சிபில் தனது நூலில் விரிவாகவே ஆராய்ந்துள்ளார்.”
இவ்வாறு டாக்டர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்.