திருநெல்வேலி;
குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர்  கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இது குறித்து நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஏழை எளிய நடுத்தர மக்கள், விவசாயிகளை வெகுவாக பாதித்துள்ளது. சிறு குறு தொழில்கள் அழிந்து வருகின்றன. பாஜக அரசு மதவாத நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது. மதவாத அமைப்புகளை கட்டவிழ்த்து விடுகிறது பாஜக. குழந்தைகள் கடத்தல் அல்லது பசுமாடு சித்திரவதை  என்ற பெயரில்  இதுவரை 47 பேர் கும்பல்களால்  கொலை செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகும் கூட அத்தகைய கும்பல்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. இதை எதிர்த்து பேசுபவர்கள், இடது சாரி கட்சிகள், தலித் அமைப்பின் தலைவர்கள் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைஉயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசு பாரா முகமாக செயல்படுகிறது. ஆகவே, மத்திய அரசை கண்டித்து திங்கட்கிழமை (செப்.10) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் நடத்தும் இப்போராட்டத்துக்கு பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இதையொட்டி, அனைத்து மாவட்டங்களில் மறியல் போராட்டமும் நடைபெறும்.

அதிமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குட்கா ஊழலில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதே போல் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது அவர் உள்ளாட்சி தேர்தலை நடத்தவே தயங்குகிறார். நடத்தாமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறார்.   உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் முறைகேடுகள் அதிகரித்து விட்டன. கோவையில் குடிநீர் விநியோகம் செய்வதை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு நீடிப்பதால் தமிழக மக்களுக்கு நல்லதல்ல.

தாமிரபரணி புஷ்கரம் கூடாது
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகும் தமிழக அரசு தாமதப்படுத்துவது சரியானதல்ல. மத்திய அரசு தங்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

அக்டோபர் மாதம் 12 தினங்கள் தாமிரவருணி புஷ்கரம் விழா நடத்தப் படுகிறது. வட இந்திய கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்துவது  நல்லதல்ல, தமிழக பண்பாடு கலாச்சாரத்தில் இல்லாத ஒரு நிகழ்வை நடத்தக்கூடாது. நதிக்கு மத சாயம் பூசுவது ஆபத்தானது. இவ்விழாவினால், பெரியளவில் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிக்கப்படும். நதியின் புனிதம் கெட்டுவிடும். மக்கள் மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை சந்திக்க நேரிடும். கழிவுகளுக்கு இடையே வாழ வேண்டியது இருக்கும்.  எனவே  தாமிரபரணி  புஷ்கரம் விழாவை நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருக்கிறோம்.
உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆலோசனை நடத்துவது காலதாமதமாக்க வேண்டும் என்பதற்காகவே. மத்திய அரசு தங்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் அமைச்சரவையை காலதாமாதமாக கூட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் சுப. சீதாராமன், மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர்  எஸ். காசிவிஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்  கரிசல் மு.சுரேஷ், சிபிஐ (எம்.எல்) மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.