===சி.ராமலிங்கம்===
மனித உணர்வுகள் வெற்றிடத்தில் வேலை செய்வது கிடையாது. இயற்கையோடு இணைந்து தான் எல்லா வேலைகளும் நடக்கின்றன. மனிதர்களை மற்ற உயிரினங்களைப்போல் அவர்களது சூழலில் இருந்து புரிந்துகொள்ள முடியாது. காரணம் மனிதர்கள் தங்கள் உழைப்பின் மூலமாக சூழ்நிலையையே மாற்றி அமைக்கிறார்கள். இவ்வாறு மாற்றியமைப்பது இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிச் செய்தவதன் மூலம் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இம்மாதிரி செய்து கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். இப்படிப்பட்ட செயல்பாடுகளால்தான் வரலாறு உருவாகிறது.

வரலாறு என்பது அரசர்கள், நாடு பிடித்தவர்கள், பிரபுக்கள், மதகுருமார்கள், பெரிய போர்த்தளபதிகள் ஆகியோரின் பட்டியல் அல்ல. மாறாக வரலாறு என்பது தொடர்ந்து இயற்கையோடு இணைந்து போராடி வளர்ச்சியை உருவாக்கிய விதமாக அல்லது பொருள் உற்பத்தி உறவுகளின் வெளிப்பாடாக இருக்கிறது.

அரசர்களும், நாடு பிடித்தவர்களும் மற்ற மேற்சொன்னவர்களும் வரலாற்றில் முக்கியமாகத் தெரிந்தாலும் அவர்கள் வரலாற்றுக்காக எதுவும் செய்யவில்லை. அவர்களைக் கடந்தும் ஏராளமான விவரங்கள் உள்ளன.

உதாரணமாக, ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார் என்று வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்கிறோம். உண்மையில் தனி மனிதனால் இவ்வளவு பெரிய உலகம் போற்றும் அதிசயத்தை உருவாக்கியிருக்க முடியுமா? உண்மையில் இந்த உலகம் போற்றும் தாஜ்மகாலின் பின்னணியில் எத்தனை தொழிலாளர்களின் உழைப்பு, கட்டிடக் கலைஞர்களின் பொறியியல் திறன், பல்வேறு விதமான கலைஞர்களின் கைவண்ணம் போன்ற பலவும் மறைந்திருக்கின்றன.

இந்தக் கட்டடம் வரலாற்றுச் சின்னமாக, நாகரீகத்தின் அடையாளமாக, கட்டடக் கலையின் உச்சமாக, கலைஞர்களின் வேலைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இன்னும் திகழ்கிறது. ஆக வரலாறு என்பது தனிமனிதனின் செயல்பாட்டால் அல்லது விதியால் அல்லது கடவுள் என்று அழைக்கப்படுபவரின் கரத்தால் உருவாக்கப்படுவது இல்லை. மாறாக, வரலாறு உண்மையில் உற்பத்தி முறைகளின் வரலாறாக ஆகிறது என்று காட்டுவதே கார்ல் மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் நோக்கம்.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் மார்க்ஸ் கம்யூனிசக் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார் என்பது பல அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இது அறிவியல்பூர்வமான உண்மையாக இருந்தாலும் கூட இந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஒரு புரியாத தத்துவமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இது புரியாத தத்துவமா அல்லது வேண்டுமென்றே குழப்புகிறார்களா?

ஐன்ஸ்டீனின் E=Mc2 என்ற கோட்பாடு உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோட்பாடுகூட பல அறிஞர்களுக்கே புரியாத கோட்பாடாக இன்றும் இருந்து வருகிறது. இது புரியவில்லை என்பதற்காக ஐன்ஸ்டீன் கோட்பாட்டைத் தவறு என்று சொல்ல முடியுமா? இந்தக் கோட்பாட்டை பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் பலர் புரிந்துகொண்டார்கள். வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் அப்படித்தான்.

வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில் வரலாறு என்பது மட்டும் புரிகிறது. அதற்குப் பிறகு பொருள்முதல்வாதம் என்பது புரியவில்லையே! இதைப் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட எடுத்துக் காட்டு உதவும் என்று நம்புகிறேன்.

மார்க்சியம் என்பதுபொருளாதாரத்தையும் அதன் உற்பத்தி முறைகளையும், உற்பத்தி உறவுகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.
உதாரணமாக நமக்கு ஒரு பேனா தேவைப்படுகிறது. இதை உற்பத்தி செய்தாக வேண்டும். இந்தப் பேனா செய்வதற்குத் தேவையான பொருட்கள், இயந்திரங்கள், முதலீடு போன்ற பல இருப்பினும் பேனாவை உருவாக்க முடியாது. அப்படி என்றால் பேனாவை உருவாக்க வேறு ஒன்று முக்கியமாகத் தேவைப்படுகிறது. அதுதான் மனித உழைப்பு. மனித உழைப்பை இயற்கையான பொருட்கள்மீது செலுத்தும்போது பொருட்கள் உருவாகின்றன. இந்த உற்பத்தியில் மனிதனுக்கும் பொருளுக்கும் உள்ள உறவுகளினால், பேனா, மனிதர்களுக்கு அல்லது சமூகத்திற்குக் கிடைக்கிறது. இந்தப் பேனா சமூகத்திற்குக் கிடைக்கும்போது அந்தப் பேனாவால் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோன்ற பலபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருள் உருவாகும்போதும் ஒட்டுமொத்த சமுதாயமே வளர்ச்சியடைந்து முன்னேறுகிறது. இதை வரலாற்றுரீதியில் பார்த்தால் நன்றாகப் புரியும். அதாவது சமூகமாற்றம் என்பதுபொருள்உற்பத்தியின் பின்னணியில் ஏற்படுகிற பொருள் காரணிகளால் ஏற்படுகிறது.

மனித சமுதாயத்தின் வளர்ச்சி குறித்த மார்க்சியக் கோட்பாடுதான் பொருள் முதல்வாதம். மனித இருத்தலுக்குத் தேவையான பொருட்களின் வளர்ச்சி, சமூக வாழ்க்கை போன்ற அனைத்தையும் தீர்மானிக்கிற முதன்மை சக்தியாக பொருள் இருக்கிறது.இதை விளக்குவதுதான் பொருள்முதல்வாதம்.

Leave a Reply

You must be logged in to post a comment.