புதுதில்லி:
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இந்தியா வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை, 68 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது வரலாற்றில் இதுவரை ஏற்படாத மோசமான வீழ்ச்சியாகும். நடப்பாண்டில் மட்டும் 11 சதவிகிதம் அளவிற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இதற்கு காரணம் என்று மோடி அரசு கூறினாலும், உண்மையில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவையே பிரதான காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசு வெளிநாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்தொகையிலும் மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, இந்தியா வெளிநாடுகளிடம் வாங்கியுள்ள கடனை டாலரிலேயே திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலையில், தற்போது டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப, ரூ. 68 ஆயிரத்து 500 கோடியை கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இதுவும் கூட, டாலர் மதிப்பு 72 ரூபாயிலேயே நிலைகொண்டிருந்தால் மட்டும்தான். 72 ரூபாயைத் தாண்டினால், கடன்மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: