சென்னை;
பெட்ரோல், டீசல் விலையை இதுவரை இல்லாத வகையில் உயர்த்தி மக்கள் மீதும் ஆட்டோ தொழிலாளர்கள் மீதும் பெரும் சுமையை ஏற்றியுள்ள மக்கள் விரோத மத்திய பாஜக அரசைக் கண்டித்து செப்டம்பர் 10 அன்று நடைபெறுகின்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களும் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச்செயலாளர் எம்.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் டீசல், பெட்ரோலைப் பயன்படுத்துபவர்களுக்கு விலை உயர்த்தப்படுகிறது. வெளிநாட்டிற்கு வெறும் 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேட்டால் ஏற்றுமதிக்கு வரி விதிப்பதில்லை என காதில் பூ சுற்றும் வேலையை மோடி அரசு செய்கிறது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சத்து 4 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புள்ளி விபரம் கூறுகிறது.

இந்தியாவில் அரசு நிறுவனங்களுக்கு இணையாக தனியார் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக மோடிக்கு மிக நெருங்கிய நண்பர்களான அம்பானி, அதானி போன்றவர்கள் எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களாக உள்ளனர். இவர்களை வாழ வைக்க, இவர்களுக்கு லாபம் சேர்க்கவே, எண்ணெய் நிறுவனங்களிடம் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை தாரை வார்த்ததற்கு அடிப்படை காரணமாகும்.

டீசல், பெட்ரோல், கேஸ் இவைகளை பெரிதும் பயன்படுத்துபவர்களாக இருப்பவர்கள் மோட்டார் தொழிலாளர்கள் ஆவர். மோட்டார் தொழிலாளர்களில் அடிமட்ட தொழிலாளர்களாக உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், விலை உயர்வால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 அன்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்கின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்துத் தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.