புதுதில்லி;
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற சர்வதேச காரணிகளே காரணம். விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய்யை டாலர் மூலமாகவே வாங்க வேண்டியிருப்பதே நமக்கு பிரச்சனையை உருவாக்குகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ‘‘ஒபெக்’’, ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு எட்டப்படவில்லை.

ஈரான் விவகாரம், வெனிசுலா மற்றும் துருக்கியில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற சர்வதேச காரணிகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைகளை எல்லாம் சரி செய்வது இந்தியாவின் கைகளில் இல்லை. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என்று கூறினார்.இதிலிருந்து விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்று மத்திய அமைச்சர் கைவிரித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.