திருவண்ணாமலை;
பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர்களையும் புகார் கூறிய மாணவியையும் வேறு கல்லூரிக்கு மாற்றுவது தீர்வாகுமா? என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன், 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார். மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலும் கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் சாந்தி தலைமையிலும் குழு விசாரணை நடைபெற்ற வருகிறது. புகார் கூறிய மாணவிக்கு பாடம் நடத்த முடியாது என்று பேராசிரியர்கள் தொடர்ந்த தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால், மாணவியின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடைபெறும் நேரத்தில் நான் வேறு கல்லூரிக்கு எப்படிச் செல்ல முடியும். விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாமல் போகும். நான் தொடர்ந்து இதே கல்லூரியில் தான் படிப்பேன் என்று மாணவி கூறினார்.
இந்நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவி திடீரென திருச்சி நாவலூர் பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடத்திய விசாரணை அடிப்படையில் மாணவியை திருச்சி கல்லூரிக்கு மாற்றியுள்ளதாகக் கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் பாலியல் தொல்லைக்குத் துணைபோனதாக உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு உதவி பேராசிரியை மைதிலியும் கோவை வேளாண் கல்லூரிக்கு மற்றொரு உதவி பேராசிரியையான புனிதாவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், ‘‘நான் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் இருந்து வேறு எந்தக் கல்லூரிக்கு மாற்றினாலும் செல்லமாட்டேன். பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களைத் தப்பிக்க வைப்பதற்காகவே என்னை வேறு கல்லூரிக்கு மாற்றியுள்ளனர். தவறு இழைக்காத நான் ஏன் வேறு கல்லூரிக்கு செல்ல வேண்டும். தவறு செய்த பேராசிரியர்களுக்குத் தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன்’’ என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எஸ்.லூர்துமேரி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பாலியல் புகார் செய்யப்பட்ட பேராசிரியர் தங்கபாண்டியன் தற்போது வரை சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். இதுவரை இதில், ஒருவரும் கைது செய்யப்படவில்லை. மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்றுவதன் மூலம், எதிர்காலத்தில் வேறு எந்த மாணவிகளும் எதற்காகவும் புகார் தெரிவிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, புகார் கூறிய மாணவி இதே கல்லூரியிலேயே படிக்க வேண்டும். மாணவியின் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.