நாகர்கோவில்:
பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்லும் ஆர்எஸ்எஸ் மற்றும் மனுஸ்மிருதியை நம்பும் பாஜக அரசு சமத்துவத்திற்கு எதிரானது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே கூறினார்.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய பெண் ஆசிரியர் முதல் மாநாடு சனிக்கிழமையன்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு தேசிய ஒருங்கிணைப்பாளர் சம்யுக்தா தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் டி.லேகா வரவேற்றார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் அபிஜித் முகர்ஜி, துணைப்பொதுச்செயலாளர் கே.சி.ஹரி கிருஷ்ணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் செண்பகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டை துவக்கி வைத்து மரியம் தாவ்லே பேசியதாவது:
கடந்த 4 ஆம் தேதி லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்ட மிகப்பெரும் பேரணி தில்லியில் நடைபெற்றது. மிகப்பிரம்மாணடமான பேரணியில் 23 மாநிலங்களிலிருந்து,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, இந்திய நாட்டு பெண்கள் இனி ஒருபோதும் வாய்மூடி இருக்கப்போவதில்லை என மத்திய அரசுக்கு கூறியுள்ளனர். இந்த நாட்டின் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட எழுவார்கள்.கல்வி கற்ற பெண்கள், எழுத்தறிவு அற்றவர்கள், கிராமங்கள், நகரங்கள், மலை கிராமங்கள் என நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கும், அவர்கள் எந்த பணியை செய்பவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். தற்போது நாட்டில் பெண்களின் நிலை மோசமாக உள்ளது. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?. நாம் அதுகுறித்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த அரசு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளை பறித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆசிரியப் பணி மிகவும் பாதுகாப்பான பணி. ஆனால் இந்த பணிக்கு என்ன நடக்க இருக்கிறது? கடந்த நான்கரை வருடங்களில் மத்திய மாநில அரசுகள் கல்வித்துறையை முழுவதுமாக தனியாருக்கு தாரை வார்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

வேலை இல்லை
புள்ளிவிவரங்களை எடுத்து பார்த்தோமானால் சுதந்திரத்திற்கு பிறகு வேலையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்துள்ளது. பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. வேலை வாய்ப்பற்ற பெண்கள் நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு, சுரண்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சட்ட விதிகளுக்கு பொருந்தாத, வேலைப்பளு அதிகம் கொண்ட இடங்களில் குறைந்த கூலிக்கு அவர்கள் முறைசாரா தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது மத்திய அரசு, எந்த ஒரு வேலையும் நிரந்தரம் இல்லை. நிர்ணயித்த கால வேலைவாய்ப்பு என்ற சட்டத்தை அறிவித்துள்ளது. யாரேனும் வேலை செய்ய வேண்டுமானால் அவர்கள் குறிப்பிட்ட காலம் மட்டுமே வேலை செய்ய முடியும். இந்த சட்டம் இடதுசாரிகள் ஆளும் கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நமது வாழ்க்கையில் பாதுகாப்பின்மை என்பது அதிகரித்து வருகிறது. இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்க, இதுபோன்ற சட்டங்களை உருவாக்குகிறது. கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்குகிறது. கல்வியும், சுகாதாரமும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை, முக்கிய உரிமை. ஆனால் இந்த அரசு கல்வி, சுகாதாரத்தை சாதாரண இந்திய குடிமகனுக்கு மறுக்கிறது. இந்த அரசு சமத்துவத்திற்கு எதிரான அரசு.ஏனென்றால் இந்த ஆர்எஸ்எஸ் பாஜக அரசு மனுஸ்மிருதியை நம்பும் அரசு.
கல்வியின்றி நாம் முன்னேற முடியாது. வேலையின்றி நாம் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியாது. அதனால் தான் பெண்களை அவர்கள் மோசமான இலக்காக வைத்துள்ளார்கள். ஆர்எஸ்எஸ் சொல்கிறது, பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும்.ஆனால் எப்போதும் நமது பிரதமர் மோடி, பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள். பெண் குழந்தைகளை பாதுகாத்திடுங்கள் என கூறுவார். ஆனால் கல்வி வியாபாரமாக்கப்பட்டதால் பெண் குழந்தைகள் வீட்டிற்குள் முடக்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் முறைசாரா தொழிலாளர்களாக மாறுகிறார்கள். பெண் ஆசிரியர்கள் பெண்கள், தொழிலாளர்கள் உரிமைகளுக்காக களம் இறங்க வேண்டும். மொத்த பாடத்திட்டமும் காவிமயமாக மாற்றப்படுகிறது. வேதங்களில், மூடநம்பிக்கைகளை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கப்படுகிறது. எந்த மதத்தை நம்ப வேண்டும், எந்த கடவுளை வழிபட வேண்டும் என்பது நமது சொந்த விஷயம். ஆனால் அவர்கள் இந்த நாட்டை இந்துத்துவ தேசமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இதை நாம் அனுமதிக்க போகிறோமா? ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் கருத்துக்களை சொல்லி கொடுக்க வேண்டும். கேள்வி கேட்க கற்றுக்கொள்ள வேண்டும். 

ஊழல் அரசு
இந்த ஊழல் அரசை கேள்வி கேட்க வேண்டும். விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களுக்கு இந்த அரசு வாரி வழங்கிய பணம் யாருடைய பணம்? அவர்கள் இந்த நாட்டின் மக்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறார்களா? இந்த ஊழல் அரசு அம்பலப்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு மனிதனாக இருக்க கற்றுக்கொடுங்கள். எது நியாயமானதோ, முற்போக்கானதோ அதற்காக போராட கற்றுக்கொடுங்கள். உங்கள் மாணவர்களுக்கு பயமின்றி உண்மை பேச கற்றுக்கொடுங்கள். தைரியமாக இருக்க கற்றுக்கொடுங்கள். அதுதான் ஒரு ஆசிரியரின் முக்கிய கடமை. நாட்டில் இனவாத, மதவாதத்திற்கெதிராக, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுங்கள். பெண்கள் பாதுகாப்பாக வாழும் நிலை வரும் வரை போராடுங்கள். நாம் போராடுவோம். நாம் வெல்லுவோம் என அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.