சென்னை:
தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் கொள்முதல் கால அளவை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான முதல்வரின் கடிதத்தை மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானிடம் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் அளித்து வலியுறுத்தினார். அந்த கடிதத்தில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட காரிப், ராபி பயிர் சாகுபடி பருவங்களுக்கான நெல் கொள்முதல் காலமானது, நீர்ப்பாசன முறை உள்ளிட்ட வெளிக் காரணிகளால் தமிழகத்தின் பயிர் சாகுபடி முறையுடன் ஒத்துப்போகவில்லை. தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் ஆகஸ்டில் இருந்து அக்டோபர் வரையிலான காலத்தில் நெல் அறுவடை நடைபெறுகிறது. இதுபோன்ற சந்தர்ப்ப சூழல் காரணமாக, நெல் கொள்முதல் காலத்தை ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை நீட்டிக்குமாறு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது. எனினும், மத்திய நுகர்வோர், உணவு, விநியோக அமைச்சகம் நிகழாண்டு கொள்முதல் காலத்தை ஆகஸ்ட் வரை மட்டுமே நீட்டிக்க அனுமதி அளித்திருந்தது. கடந்த ஆண்டுகளில் இந்த உத்தரவானது செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மேலும், கஸ்டம் மில்டு’ அரிசியை தமிழகத்திற்கு நிகழாண்டு நவம்பர் வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செப்டபம்ர் 30 ஆம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.