தேனி;
ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுகூடி பாராட்ட வேண்டிய படம், மேற்குத் தொடர்ச்சி மலை என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் – கலைஞா்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், கம்பம் நிழல் திரைப்பட சங்கம் ஆகியவை சார்பில் மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கான பாராட்டு விழா வெள்ளியன்று கம்பத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச தேனி மாவட்டத் தலைவர் இதயநிலவன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச்செயலாளர் தமிழ்மணி வரவேற்றுப் பேசினார்.

விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா, மேற்குத் தொடர்ச்சிமலை படைப்பாளிகளை பாராட்டி சிறப்புரையாற்றினார். தமுஎகச மாநில துணைத்தலைவர் என்.நன்மாறன், தமிழக அரசின் முன்னாள் தில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் பெ.செல்வேந்திரன், கவிஞர் ஜோ மல்லூரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா, பொறியாளர் துரை அன்பழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி ஏற்புரை நிகழ்த்தினார். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வசனகர்த்தா ராசி தங்கதுரை, எடிட்டர் காசி விசுவநாதன் மற்றும் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனா். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.லெனின் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் சுருளிப்பட்டி சிவாஜி தொகுத்து வழங்கினார்.

கம்யூனிஸ்ட் விதைத்த விதைதான்
 இந்நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசியதாவது:-
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே பார்த்து பிரமிப்படைந்தேன். மண்ணின் வாழ்க்கையை இனி எவரும் இதுபோன்று காட்சிப்படுத்த முடியாது. மண்ணின் ஈரம், ஒப்பனை இல்லாத பேச்சு, உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு இப்படத்தை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் சென்றுள்ளது. ஒரு கம்யூனிஸ்ட்காரன் விதைத்த விதைதான் இயக்குநர் லெனின் பாரதி. இயக்குநரை பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை. உலகத்தரத்தில் உள்ள இயக்குநர்களில் வெற்றிமாறன் உட்பட 15 பேர்களை தேர்வுசெய்தால் அவர்களுக்கு ஒருபடி மேலேதான் லெனின் பாரதி இருப்பார்.

அப்படிப்பட்ட இயக்குநருக்கு தமுஎகச விழா எடுத்து இதே மண்ணிலேயே பாராட்டுவது எனக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு. தமுஎகச என் திரைப்படங்களை மூன்று நாட்கள் ஆய்வுசெய்து திண்டுக்கல்லில் பிரம்மாண்டமான அளவில் விழா எடுத்து என்னை பெருமைப்படுத்தியது. மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு அற்புதமான படைப்பு. ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றுசேர்ந்து பாராட்ட வேண்டிய படம் ஆகும். இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் விழா எடுக்கும். இதற்காக இயக்குநர்களிடம் பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.