ஜார்ஜியா;
டிஜிட்டல் பத்திரிகை யுகத்தில் அமெரிக்காவின் ஜார்ஜியா – மாகாணத்தில் ‘என்ஆர்ஐ பல்ஸ்’ என்ற பத்திரிகையை நடத்தி வரும் முதல் இந்திய பெண் என்று லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் வீணா ராவ்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் ஆசிய-அமெரிக்கர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் 2006ஆம் ஆண்டு, மாதாந்திர பத்திரிகையாக என்.ஆர்.ஐ பல்ஸ், தொடங்கப்பட்டது.அச்சு ஊடகத்தை மக்கள் பயன்படுத்துவது குறைந்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், மிகப்பெரிய பத்திரிகைகள்கூட மூடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த சூழலில், புதிய பத்திரிகை தொடங்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.

ஒரு செய்தித்தாளை நடத்துவதில் வழக்கமாக ஏற்படும் சிரமங்கள், நிதி நெருக்கடிகள் என அனைத்தையும் வீணா ராவ் எதிர்கொண்டார்.”தினசரி காலையில் செய்தித்தாள் படிக்கும் வழக்கம் அமெரிக்காவில் மிகவும் குறைந்துவிட்டது. எனவே, இலவசமாக பத்திரிகையை கொடுப்பதுதான் எங்கள் முன்னால் இருந்த ஒரே வழியாக இருந்தது. மக்கள் அதிகமாக புழங்கும் மளிகைக் கடைகள், உணவகங்கள், ஆலயங்கள், நூலகங்கள் என பொது இடங்களில் இலவச பத்திரிகைகளை தொடர்ந்து வைத்தால், மக்கள் அவற்றை எடுத்துக் கொள்வார்கள். எனவே, நான் பத்திரிகைகளை இலவசமாகவே விநியோகிக்கும் முடிவை எடுத்தேன்” என்று வீணாராவ் கூறினார்.

அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு புனேயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றியிருந்தார் வீணா.கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த வீணா ராவ், புனே ஃபெர்குன்சன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இதைத்தவிர இதழியல் துறையில் பட்டய மேற்படிப்பையும் முடித்திருக்கிறார்.மேலும் உமன்ஸ் எரா மற்றும் ஃபெமினா போன்ற இந்திய பத்திரிகைகளுக்கு கதைகள் மற்றும் கட்டுரைகளை அவர் ஆரம்ப காலத்தில் எழுதி வந்தார்.

அரிதான சாதனை
இந்தியாவிற்கு வெளியே பத்திரிகை வெளியிடும் முதல் இந்திய பெண்மணி என்று வீணா ராவின் பெயர் 2010ஆம் ஆண்டில் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
“எழுத்துத்துறையில் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் பத்திரிகையை நானே நடத்துவேன் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை என்றும் அமெரிக்காவைத் தவிர இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ என்னால் பத்திரிகை நடத்தியிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்” என்றும் கூறுகிறார் வீணா ராவ்.

Leave a Reply

You must be logged in to post a comment.