தீக்கதிர்

அனைத்து திட்டங்களிலும் ஊழல் மேல் ஊழல் – சிக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி பல்வேறு திட்டங்களின் மூலம் ஊழல் மேல் ஊழல் செய்து வருவது தற்போது அம்பலமாகி வருகிறது.
ஏற்கனவே கோவை மாநகராட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் நிறுவனத்திற்குத்தான் அனைத்து ஒப்பந்தங்களும் வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. அதனடிப்படையிலேயே பல்வேறு ஒப்பந்தக்காரர்கள் நிராகரிக்கப்பட்டு அவரது உறவினர்களுக்கு மட்டுமே பல நூறு கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதுகுறித்து ஏற்கனவே தீக்கதிர் நாளிதழ் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்திற்கு ரூ 595.24 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட திட்டத்தை சூயஸ் நிறுவனத்திற்கு ரூ 3200 கோடிக்கு செய்து தரக்கோரி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்த ”பல்வேறு டீல்கள் ” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆஸ்திரேலியா சென்ற போது அங்கு வைத்து பேசி முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாநகரங்களின் குடிநீர் விநியோக உரிமையை விதிமுறைகளை மீறி, அதிகாரிகளை மிரட்டி பிரான்ஸை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்தும் தீக்கதிர் நாளிதழ் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தி டைம்ஸ் நவ் என்ற ஆங்கில செய்தி ஊடகம் விரிவான விசாரணை நடத்தி அமைச்சர் எஸ்.வி.வேலுமணி தொடர்புடைய ஊழல்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. அதில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளரும், கோவை இளைஞர் அணி செயலாளருமான ராஜன் சந்திரசேகர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு அமைச்சர் வேலுமணி கோவை மாநகராட்சியின் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.100 கோடியாக இருந்த அந்நிறுவனத்தின் வருவாய் 2016-17ம் ஆண்டில் ரூ.142 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், வரதன் இன்ஃப்ராஸ்டரக்சர் நிறுவனம், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு சொந்தமான பி.செந்தில் அண்ட் கோ நிறுவனம் என மொத்தம் 4 நிறுவனங்களுக்கு அமைச்சர் வேலுமணி வழங்கிய ஒப்பந்தங்களினால் அந்த நிறுவனங்களின் வருவாய் சென்ற வருடத்தை விட பல கோடிகள் அதிகரித்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்த முறைகேடுகளின் மூலம் மட்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.125 கோடி வரை ஆதாயம் அடைந்திருப்பதாகவும் டைம்ஸ் நவ் நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது. இந்த ஊழல் புகார் குறித்து விளக்கம் கேட்ட டைம்ஸ்நவ் செய்தியாளர் சபீரிடம் அமைச்சர் வேலுமணி இது சுத்த பொய். நான் விரும்பினால் மட்டுமே என்னிடம் நீங்கள் கேள்வி எழுப்ப முடியும் என்று பேசியபடியே நழுவிச்சென்றார். இது கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.