திருப்பூர்,
திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்த்தல் பணி வெள்ளியன்று துவக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் – 5,880, கட்டுப்பாட்டு இயந்திரம்- 3,200, விவிபிஏடி – 3,200 இயந்திரங்கள் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பல்லடம் வட்டாட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாரத் எலக்ட்ரானிக் நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணி கடந்த ஆக.27ம் தேதியன்று துவக்கப்பட்டு செப்.5 தேதியன்று முடிவடைந்தது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாரத் எலக்ட்ரானிக் நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணி வெள்ளியன்று துவக்கப்பட்டது. இதில் விவிபிஏடி இயந்திரம் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை திருப்பூர் துணை ஆட்சியர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கலால் உதவி ஆணையர் சக்திவேலு, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: